Last Updated : 02 Sep, 2017 06:06 AM

 

Published : 02 Sep 2017 06:06 AM
Last Updated : 02 Sep 2017 06:06 AM

தேரா சச்சா சவுதாவின் அடுத்த மடாதிபதியாக எதிர்பார்க்கப்பட்ட குர்மீத்தின் வளர்ப்பு மகள் தலைமறைவு

தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகளான ஹனிபிரீத் இன்சான் தலைமறைவாக உள்ளார். பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தப்பிச் செல்லும் திட்டத்துக்கு ஹனிபிரீத் உடந்தையாக இருந்தார் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹரியாணாவில் 15 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் பலாத்கார சம்பவத்தில் குர்மீத் ராம் ரஹீம் சிங் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இவர் குற்றவாளி என கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தப்பிச் சென்று தனது மடத்தில் பதுங்கியிருக்க திட்டமிட்டார். ஆயிரக்கணக்கான சீடர்களை மீறி தன்னை கைது செய்வது போலீஸாருக்கு சவாலாக அமையும் என்பதால் அவர் இவ்வாறு திட்டமிட்டார். இதற்கு உதவியது, கலவரத்தை தூண்டியது என பல வழக்குகள் குர்மீத்தின் இசட் பிரிவு பாதுகாவலர்கள் 5 பேர், வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சான் (42), செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஆதித்யா இன்சான் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டது.

டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் கண் துறை பேராசிரியராக இருந்தவர் ஆதித்யா. கடைசியாக ஆகஸ்ட் 25-ல் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் இருந்து அரசு ஹெலிகாப்டரில் ரோட்டக் சிறைக்கு குர்மீத்தை கொண்டு செல்லும்போது அவருடன் ஹனிபிரீத் பயணித்தார். அதற்கு பிறகு அனைவரும் தலைமறைவாகி விட்டனர். இதில் இசட் பிரிவு காவலர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர். தலை மறைவாகி விட்ட ஹனிபிரீத், ஆதித்யா மற்றும் மடத்தின் நிர்வாகிகள் சிலர் தேடப்பட்டு வருவதாக நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின்போது, குர்மீத்துக்கு பணி செய்தவாறு அவருடன் சிறையில் இருக்க ஹனிபிரீத் அனுமதி கேட்டார். ஆனால் நீதிபதி இதற்கு அனுமதி அளிக்கவில்லை.

குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் சீடர்களான ராமானந்த் தனேஜா - ஆஷா தனேஜா தம்பதியின் மகளே ஹனிபிரீத். இவரது இயற்பெயர் பிரியங்கா தனேஜா. ஹரியாணாவின் பத்தேபாத்தை சேர்ந்த இந்த தம்பதியர் தங்கள் மகளை குர்மீத் சிங்கின் மடம் சார்பில் நடத்தப்படும் பள்ளியில் சேர்த்தனர். பிறகு குடும்பத்துடன் மடத்தில் வசித்தபோது, குர்மீத் உடன் பிரியங்காவுக்கு நெருக்கம் ஏற்பட்டது.

பிறகு 1999, பிப்ரவரி 14-ல் பிரியங்காவை குர்மீத் தனது பணக்கார சீடர்களில் ஒருவரான விஷ்வாஸ் குப்தாவுக்கு திருமணம் செய்து வைத்தார். இத்துடன் பிரியங்காவின் பெயரை ஹனிபிரீத் இன்சான் என மாற்றி தனது வளர்ப்பு மகளாக அறிவித்தார். இதன் பிறகும், இருவருக்குள் இருந்த நெருக்கத்தை விஷ்வாஸுடன் குர்மீத்தின் குடும்பத்தினரும் கடுமையாக எதிர்த்தனர். குர்மீத்துடன் தனது மனைவிக்கு தவறான உறவு இருப்பதாக கூறிய விஷ்வாஸ் அவரை 2011-ல் விவாகரத்து செய்தார். எனினும் குர்மீத் - ஹனிபிரீத் உறவு தொடர்ந்தது. இதனால் குர்மீத்தின் மகன் ஜஸ்மித் சிங் இன்சான் தனது தந்தையுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

ஹனிபிரீத்தின் ட்விட்டர் பக்கத்தை 10 லட்சத்துக்கு மேற்பட்டோரும் முகநூலை 5 லட்சத்துக்கு மேற்பட்டோரும் பின் தொடர்கின்றனர். இவற்றில் ஹனிபிரீத் தன்னை ‘தந்தையின் தேவதை மகள்’, ‘அற்புதமான தந்தையின் சிறந்த மகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை மனிதநேயர், நடிகை, திரைப்பட இயக்குநர், படத் தொகுப்பாளர் என்று குறிப்பிட்டுள்ளார். குர்மீத் கதாநாயகனாக நடித்து தனது சொந்த செலவில் எடுத்த 5 இந்திப் படங்களை ஹனிபிரீத் இயக்கியுள்ளார். குர்மீத் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து தேரா சச்சா சவுதாவின் புதிய மடாதிபதியாக ஹனிபிரீத் பதவியேற்பார் என கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தலைமறைவாக உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x