Last Updated : 23 Sep, 2017 03:11 PM

 

Published : 23 Sep 2017 03:11 PM
Last Updated : 23 Sep 2017 03:11 PM

நாங்கள் வித்தியாசமானவர்கள்; வாக்குகளுக்காக அரசியல் செய்பவர்களல்ல: பிரதமர் மோடி

‘அரசியல்வாதிகள் வாக்குகள் கிடைப்பதற்காக பணியாற்றுவர், ஆனால் நாங்கள் வித்தியாசமான பண்பாட்டில் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள்’ என்று வாரணாசி, ஷாஹன்ஷாபூரில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இங்கு ‘பசு ஆரோக்கிய மேளா’-வைத் தொடங்கிய பிரதமர் மோடி, வேளாண் வருவாயை இரட்டிப்பாக்கவும், 2022-ல் வீடில்லாதோர்க்கு வீடுகளும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

“எங்கள் அரசியல் வாக்குவங்கி அரசியல் அல்ல, எங்கள் கலாச்சாரம் வேறு. அரசியலில் வாக்குகளைப் பெற்றுத்தரும் பணிகளைத்தான் செய்வார்கள். ஆனால் எங்கள் குணாதிசயம் வேறு.

சில அரசியல்வாதிகள் வாக்குகள் பெற்றுத்தரும் என்றால்தான் சில பணிகளைச் செய்வார்கள். ஆனால் நாங்கள் வேறு மாதிரியான பண்பாட்டில் வளர்ந்தவர்கள். எங்களைப் பொறுத்தவரை தேசம்தான் முதலில், இதற்குத்தான் முன்னுரிமை, வாக்குகளுக்கு அல்ல.

கருப்புப் பணம், ஊழலுக்கு எதிராக போர் தொடுத்துள்ளோம். நேர்மையற்றவர்கள் அடித்த கொள்ளைக்கு ஏழைகள் இலக்காகியுள்ளனர்.

இப்போது இங்கு நடத்தப்படும் இந்த விலங்குகள் விழாவை எடுத்துக் கொள்வோம். இந்த விலங்குகள் வாக்களிக்கப்போவதில்லை. இவை யாருடைய வாக்காளர்களும் அல்ல.

கால்நடை வளர்ப்பில் அவற்றின் ஆரோக்கியம் மிக முக்கியமானது, அப்படி அவற்றைப் பராமரித்தால்தான் அவை பால் உற்பத்தியைப் பெருக்கும், பல நாடுகளை விட பால் உற்பத்தியில் இந்தியா பின் தங்கியுள்ளது.

பால்பொருட்கள், காலநடை வளர்ப்பு, தொடர்பான தொழில்களில் ஈடுபட்டு விவசாயிகள் வருவாய்க்கான மாற்று ஆதாரங்களைக் கண்டடையலாம்.

நாடு முழுதும் கோடிக்கணக்கான வீடுகளைக் கட்ட செங்கல், சிமெண்ட், இரும்பு, மரம் தேவை. அது வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். இது சிலருக்கு வருவாய் மற்றும் வேலை வாய்ப்புக்கு புதிய வாசல்களைத் திறக்கும்.

2022-ம் ஆண்டு ஒவ்வொரு ஏழைக்கும் வீடு கிடைக்கும். கோடிக்கணக்கான வீடுகளைக் கட்டுவதால் வேலைவாய்ப்பும் வருவாயும் பெருகும்.

மோடி இத்தகைய பணிகளை கையிலெடுக்கவில்லை எனில் வேறு யார் எடுக்க முடியும்.

முந்தைய அரசு (சமாஜ்வாதி) ஏழைகளுக்கு வீடு வழங்குவதில் விருப்பம் காட்டவில்லை, அதனால்தான் கடும் நெருக்கடிக்குப் பிறகே பட்டியலை அனுப்பினர். ஆனால் தற்போதைய யோகி ஆதித்யநாத் அரசு வீடு வழங்கும் திட்டத்துக்காக லட்சம் பெயர்கள் கொண்ட பட்டியலை அனுப்பியுள்ளது.

ஊழல்வாதிகள் கொள்ளையடிப்பதனால் சாதாரண, நேர்மையான மனிதர்கள் கஷ்டப்படுகின்றனர். நேர்மைக்கான விழிப்புணர்வு திருவிழா போல் சென்று கொண்டிருக்கிறது. அதாவது நம் வியாபார சகோதரர்கள் ஜிஎஸ்டி மற்றும் ஆதாருடன் தங்களை இணைத்துக் கொள்வதைத்தான் குறிப்பிடுகிறேன். மக்கள் பணம் மக்கள் நலனுக்கே செலவிடப்படும்” என்றார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x