Published : 24 Sep 2017 06:35 AM
Last Updated : 24 Sep 2017 06:35 AM

வாக்கு வங்கியைப் பற்றி பாஜக கவலைப்படவில்லை: நாட்டின் வளர்ச்சிக்கே முன்னுரிமை அளிப்போம் - வாரணாசி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

பாஜகவைப் பொருத்தவரை நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து வருவதாகவும் பிற அரசியல் கட்சிகளைப் போல வாக்கு வங்கியைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். முதல் நாளில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் 2-வது நாளான நேற்று ஷஹான்ஷாபூரில் கால்நடை சுகாதார கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நேர்மையற்ற, முந்தைய ஆட்சியாளர்கள் நாட்டின் வளத்தை சூறையாடினார்கள். இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக மத்திய அரசு போரிட்டு வருகிறது.

பொதுவாக அரசியலில் ஈடுபட்டிருப்பவர்கள் வாக்கு வங்கியைக் கவர வேண்டும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள். ஆனால் எங்கள் (பாஜக) அரசியல் என்பது வாக்கு வங்கியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டது அல்ல. எங்களது கலாச்சாரம் மாறுபட்டது. எங்களைப் பொருத்தவரை நாட்டு நலனே எல்லாவற்றுக்கும் மேலானது. வாக்கு வங்கியைவிட, நாட்டின் வளர்ச்சிக்கே நாங்கள் அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறோம்.

குறிப்பாக, முதன்முறையாக 1,800 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான கால்நடை சுகாதார கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இந்த கால்நடைகள் வாக்களிக்கப் போவதில்லை. கால்நடைகளின் சுகாதாரம் பாதுகாக்கப்பட்டால் பால் உற்பத்தி அதிகரிக்கும் என்ற நோக்கத்தில்தான் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

கால்நடைகளுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவர்கள் இங்கு உள்ளார்கள். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏழைகள் பயன்பெறலாம். மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

விவசாயிகளுக்கு மாற்று வருவாய் ஆதாரத்தை உருவாக்குவதற்காக, பால் பண்ணை மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலிலும் ஈடுபடுமாறு ஊக்குவிக்கிறோம். இதனால் அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதுடன் நாட்டின் வருவாயும் அதிகரிக்கும்.

அனைவருக்கும் வீடு

நாடு முழுவதும் உள்ள கோடிக் கணக்கான ஏழை குடும்பத்தினர் இன்னமும் சொந்த வீடு இல்லாமல் உள்ளனர். எனவே, நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும்போது (2022) கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்மூலம் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் ஏழைகளின் வருமானமும் அதிகரிக்கும்.

உத்தரபிரதேசத்தில் முந்தைய அரசு (சமாஜ்வாதி அரசு) ஏழைகளுக்கு வீடு வழங்குவதில் அக்கறை செலுத்தவில்லை. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக வீடு இல்லாத 10 ஆயிரம் பேரின் பட்டியலை மட்டுமே மத்திய அரசுக்கு வழங்கியது. ஆனால், யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு லட்சக் கணக்கானோர் அடங்கிய பட்டியலை வழங்கி உள்ளார். அவர்களுக்கு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரமும் வழிபாடுதான்

திறந்தவெளியில் மலம் கழிப்பதால் பல்வேறு நோய்கள் பொதுமக்களை குறிப்பாக ஏழை மக்களை தாக்குகின்றன. எனவே, அனைத்து கிராமங்களிலும் கழிவறைகளைக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு தடுக்கப்பட்டு ஏழைகள் பல்வேறு நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். எனவே என்னைப் பொருத்தவரை சுகாதாரமும் ஒருவகை வழிபாடுதான்.

நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது நம் அனைவரின் கடமை ஆகும். அப்போதுதான் தூய்மையான கிராமங்கள், தூய்மையான நகரங்கள் மற்றும் தூய்மையான நாட்டை உருவாக்க முடியும். 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ள 2022-ம் ஆண்டுக்குள் நாட்டை மேம்படுத்த வேண்டும் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x