Published : 02 Mar 2023 05:58 AM
Last Updated : 02 Mar 2023 05:58 AM

நன்கு திட்டமிடப்பட்ட நகரங்களே இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் - பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: நன்கு திட்டமிடப்பட்ட நகரங்களே நாளைய இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய முக்கிய அம்சமாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற திட்டமிடல், மேம்பாடு மற்றும் சுகாதாரம் குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய வெபினாரில் பிரதமர் மோடி கூறியது: குப்பையில்லா நகரம், காலை நிலை மீள்உருவாக்கம், தண்ணீர் பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையானதாக கொண்டு நகர்ப்புற திட்டமிடலை நன்கு கவனத்துடன் கட்டமைக்க வேண்டும். நன்கு திட்டமிடப்பட்ட நகரங்கள்தான் நாளைய இந்தியாவின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும்.

அனைத்து சாத்தியக் கூறுகளையும் கருத்தில் கொண்ட பிறகு நன்கு வடிவமைக்கப்படும் நகரங்கள்தான் தட்பவெப்ப நிலையை தாங்கக் கூடியதாகவும், நீர்வளம்மிக்கதாகவும் இருக்கும். திட்டமிடப்பட்ட நகரங்களை கட்டமைக்க 2 மற்றும் 3 அடுக்கு நகரங்களில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.

புதிய நகரங்களின் வளர்ச்சி மற்றும் பழைய நகரங்களில் இருக்கும் அமைப்புகளின் நவீனமயமாக்கல் ஆகியவற்றின் கண்ணோட்டத்தில்தான் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நகர்புற வளர்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்த பட்ஜெட்டில் நகர்ப்புற மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.15,000 கோடி ஊக்கத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

2014-க்குப் பிறகு மெட்ரோ இணைப்புகள் அதிகரித்துள்ளன. இதில், பல நாடுகளை விட நாம்முன்னால் இருக்கிறோம். மெட்ரோஇணைப்புக்கான நெட்வொர்க்கை வலுப்படுத்தி, வேகமாகவும் அதேசமயம், கடைசி மைல் வரையிலானஇணைப்பை வழங்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.இதனை சாத்தியமாக்குவதற்கு திறமையான திட்டமிடல்தான் தற்போதைய அவசிய தேவை.

அதேபோன்று, 2014-ம் ஆண்டுக் குப் முன்பு 14-15% மட்டுமே இருந்த நகராட்சிக் கழிவுகளின் பதப்படுத்தல் அளவு தற்போது 75 சதவீதமாக உயர்ந்துள்ளது. கழிவு பதப்படுத்தும் பணிகளை முன்னரே முடுக்கிவிட்டிருந்தால் இன்று நமது நகரங்கள் குப்பை மேடு போல் காட்சியளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கம் கவனிக்கத்தக்க வெற்றியினைப் பெற்றுள்ளது. நகரங்களில் சுத்த மான குடிநீர் அளிப்பை உறுதி செய்வதற்காகவே அரசு அம்ருத் 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x