Last Updated : 02 Mar, 2023 04:44 AM

 

Published : 02 Mar 2023 04:44 AM
Last Updated : 02 Mar 2023 04:44 AM

டெல்லி – ஜெய்ப்பூர் இடையே மின்சார விரைவு சாலை: இந்தியாவிலேயே முதல் முறையாக அமைகிறது

கோப்புப்படம்

புதுடெல்லி: இந்தியாவில் முதல் மின்சார விரைவு சாலை டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு அமைக்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் 26 சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற இந்தோ-அமெரிக்கா வர்த்தக சபை கூட்டத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது, ‘‘இந்தியப் பொதுப் போக்குவரத்தை மின்சாரத்தால் அமைக்க மத்திய அரசு விரும்புகிறது’’ என்றார். அவர் கூறியதுபோல், முதல் மின்சாரப் போக்குவரத்து சாலை டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு அமைகிறது. இந்த சாலையானது, டெல்லி - மும்பை விரைவுச் சாலையின் ஒரு பகுதியாக அமையும். இந்த 5 வழிச் சாலையின் முதல் பகுதியை, பிரதமர் மோடி ஜெய்ப்பூரில் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். தற்போது டெல்லியிலிருந்து ஜெய்பூர் வரையிலான இந்த சாலையை மும்பை வரை நீட்டிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த 5 வழிப்பாதையில் ஒரு வழியை, மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை, மின்சார சாலையாக மாற்றுகிறது. இந்த சாலையில் சூரிய ஒளியால் கிடைக்கும் மின்சாரத்தின் உதவியால் வாகனங்கள் இயங்க உள்ளன. இதில் பொதுமக்களுக்கானப் போக்குவரத்தும், கனரக வாகனங்களும் சென்றுவர உள்ளன.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “டெல்லி - மும்பை விரைவுச் சாலையில் முதல் மின்சார சாலை டெல்லியிலிருந்து ஜெய்ப்பூர் வரை அமைக்க திட்டமிடப்படுகிறது. இதன்மூலம், குறிப்பிட்ட அளவிலான நேரமும், பெட்ரோல் மற்றும் டீசல் செலவும் மிஞ்சும். இவற்றில் செல்லும் பேருந்துகள் மின்சார வயர்கள் மூலமாக இயங்கும். அதிநவீன தொழில்நுட்பம் இந்த போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளது” என்று குறிப்பிட்டனர்.

இதுபோன்ற மின்சார சாலைகள் நாடு முழுவதிலும் 26 அமைக்கப்பட உள்ளன. நாட்டின் முக்கியத் தலைநகரங்களை அதை சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் வகையில் இவை இருக்கும். இதில், சென்னைக்கும் ஒரு மின்சார சாலை அமைய உள்ளது. அநேகமாக இது, சென்னை - பெங்களூரூ விரைவுச் சாலையில் அமையும் வாய்ப்புள்ளது.

இந்தியா தொழில் நாடாக முன்னேற அதன் அடிப்படை கட்டுமான வசதிகள் அவசியம் என பிரதமர் நரேந்திரமோடி அடிக்கடி கூறுவது வழக்கம். இதன் அடிப்படையில் ஒன்றான இந்த மின்சார விரைவுச் சாலை டெல்லி-ஜெய்ப்பூருக்கு முதலாவதாக அமைகிறது. இதுபோல், கட்டுமான வசதிகள் கொண்ட சாலைகளை அமெரிக்காவுக்கு இணையாக வரும் 2024-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி கூறிவருவது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x