Last Updated : 28 Feb, 2023 05:47 AM

 

Published : 28 Feb 2023 05:47 AM
Last Updated : 28 Feb 2023 05:47 AM

ஷிமோகா விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் - ‘ஹவாய்’ செருப்பு அணிந்தவர்களும் விமானத்தில் பறக்க வேண்டும் என விருப்பம்

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார். உடன் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர். படம்: பிடிஐ

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் ரூ.450 கோடியில் தாமரை வடிவத்தில் புதிதாக விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள பயணிகள் முனையக் கட்டிடம் ஒரு மணி நேரத்துக்கு 300 பயணிகளைக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 775 ஏக்கர் பரப்பளவில் க‌ட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்துக்கு கன்னட தேசியக் கவிஞர் குவெம்புவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று நடைபெற்ற விமான நிலைய திறப்பு விழாவில், பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடி விமான நிலையத்தை திறந்து வைத்து பேசியதாவது:

இன்று ஷிமோகாவை பூர்வீகமாக கொண்ட முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் 80-வது பிறந்த நாள். ஷிமோகாவின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அவரது பிறந்த நாளில், விமான நிலையம் திறக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விமான நிலையத்துக்கு அவரது பெயரை சூட்ட கர்நாடக அரசு விரும்பியது. ஆனால் அவர் தன்னடக்கத்துடன் மறுத்துவிட்டார்.

கட்சி மற்றும் மக்களின் நலனுக்காக 80 வயதிலும் பாடுபட்டு கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து இந்த பாடத்தை அனைவரும் கற்க வேண்டும். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அனைவரும் செல்போனில் டார்ச் லைட் அடிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறி எடியூரப்பாவை வாழ்த்தினார். இதனையடுத்து அரங்கத்தில் இருந்த அனைவரும் 2 நிமிடங்கள் செல்போனில் டார்ச்லைட் அடித்து ஆரவாரம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து மோடி பேசியதாவது: சர்வதேச அளவில் வேகமாக முன்னேறி வரும் இந்தியாவுக்கு நூற்றுக்கணக்கான விமான நிலையங்கள், ஆயிரக்கணக்கான விமானங்கள் தேவைப்படுகின்றன. கர்நாடகாவில் இரட்டை இன்ஜின் அரசு (மத்திய - மாநில பாஜக அரசு) இருப்பதால் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன.

‘ஹவாய்’ செருப்பு அணிந்தவர்களும் அதிநவீன விமானத்தில் பறக்க வேண்டும். அந்த சூழலை இப்போதே நான் மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதையடுத்து பிரதமர் மோடி, ரூ.990 கோடியில் ஷிமோகா - ராணிபென்னூர் புதிய ரயில் வழித்தடத்துக்கும், ரூ.100 கோடியில் கோட்டேகன்குரு ரயில் பெட்டிபணிமனை மையத்துக்கும் அடிக்கல் நாட்டினார். ஷிமோகாவில் ரூ.895 கோடி மதிப்பிலான 44 ஸ்மார்ட் சிட்டி திட்டங்களையும் தொடங்கி வைத்தார். பின்னர் பெலகாவிக்கு சென்ற மோடி, ஜல் ஜீவன் திட்ட‌த்தின் கீழ் ரூ.1,585 கோடியில் 315-க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் வசதி பெறும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

கர்நாடகாவில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால்பிரதமர் மோடி கடந்த 2 மாதங்களில் 5-வது முறையாக கர்நாடகாவுக்கு வருகை புரிந்தார். அதுபோல் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் கர்நாடக மாநிலத்துக்கு வராததால் அக்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x