Published : 28 Feb 2023 05:37 AM
Last Updated : 28 Feb 2023 05:37 AM

அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே மாணவர்களின் கருத்துகளை அரசு கேட்டறிய வேண்டும். இது அரசின் கடமை ஆகும்.

ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவருக்கு நீதி பெற்றுத் தர வேண்டியது நீதிமன்றத்தின் கடமை ஆகும். நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும். மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையில் இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பன தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.

இந்த வழக்குகள் லட்சக்கணக்கான மாணவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. நீட் தேர்வு தொடர்பாக அதிகரித்து வரும் வழக்குகள், இந்திய மருத்துவக் கல்வியில் சீர்திருத்தம் அவசியம் என்பதை உணர்த்துகிறது.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மருத்துவத் துறையும் நீதித் துறையும் இணைந்து தீர்வுகாணவேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது. கரோனா தொற்று காலத்தில்மக்களுக்கு மருத்துவர்கள் ஆற்றியசேவை அளப் பரியது. இதற்காக அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

ஒரு நோயாளி முழுமையாக குணமடைய போதிய ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உங்களது கடினமான பணி சூழலில் நீங்களும் போதிய ஓய்வு எடுங்கள்.

அண்மைக்காலமாக மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மருத்துவமனைகளை சூறையாடுகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மருத்துவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

மக்கள் தொகை அதிகரிப்பு: நாட்டின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அவர்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக சட்டம் இயற்றுபவர்கள், சுகாதாரத் துறை நிபுணர்கள், சமுதாய தலைவர்கள் ஒன்றிணைந்து ஆலோசித்து உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x