Published : 27 Feb 2023 08:11 AM
Last Updated : 27 Feb 2023 08:11 AM

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல்: நேரடி தொடர்புள்ள நடிகை தலைமறைவு

ஹேமந்தி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2016 ஆண்டு ஆசிரியர் உட்பட பல்வேறு பணியிடங்களில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது சுமார் 21,000-க்கும் மேற்பட்டோர் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக அப்போதைய கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவருக்கு நெருக்கமான நடிகை அர்பிதா கைது செய்யப்பட்டனர். அர்பிதா வீடுகளில் ரூ.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் திரிணமூல் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் குந்தல் கோஷிடம் விசாரணை நடத்திய போது, அவர் அளித்த தகவலின்படி மற்றொரு நடிகை ஹேமந்தி கங்குலியைஅமலாக்கத் துறை அதிகாரிகள் தேடினர் போது, அவர் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “ஆசிரியர் நியமன ஊழல் விவகாரத்தில் நடிகை ஹேமந்திக்கு நேரடி தொடர்பிருப்பது தற்போதுதான் தெரியவந்துள்ளது. முதல் கட்ட விசாரணையில் அவருக்கு ரூ.20 கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையிலும் அவர் முதலீடு செய்துள்ளார். திரைப்படத் துறையில் அவர் சம்பாதிக்கவில்லை. அவரது நிறுவனங்களும் லாபகரமாக இயங்கவில்லை. இந்த ஊழலில் தொழிலதிபர் கணவர் கோபாலுடன் சேர்ந்து சுருட்டிய கோடிக்கணக்கான பணத்தில் ஹேமந்தி ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறார். தலைமறைவாக இருக்கும் அவர் விரைவில் பிடிபடுவார்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x