Published : 26 Feb 2023 04:49 PM
Last Updated : 26 Feb 2023 04:49 PM

கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி | மீண்டும் ஒரு யாத்திரைக்கு காங்கிரஸ் திட்டம்

ராய்ப்பூர்: நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி மற்றொரு யாத்திரையை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்த விவரங்கள் இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அக்கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த மாநாடு இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ''தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரை மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த யாத்திரை கட்சிக்கு மிகப் பெரிய புத்துணர்ச்சியை அளித்துள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் நோக்கி நடைபெற்ற இந்த யாத்திரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதேபோல், அருணாச்சலப் பிரதேசத்தின் பசிகாட் பகுதியில் இருந்து குஜராத்தின் போர்பந்தர் வரை மற்றொரு பாத யாத்திரையை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த பாத யாத்திரை முழுக்க முழுக்க பாத யாத்திரையாக இருக்காது. ஏனெனில், இந்த பாதையில் பல இடங்களில் காடுகளும் ஆறுகளும் குறுக்கிடுகின்றன. எனவே, இந்த யாத்திரை பல்வேறு முறைகளைக் கொண்டதாக இருக்கும். எனினும், பெரும்பகுதி இது பாத யாத்திரையாகவே இருக்கும்.

கர்நாடகாவில் வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் தொடங்கியதும் மழைக்காலம் தொடங்கிவிடும். அதன் பிறகு நவம்பரில் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் வர இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு பாத யாத்திரைக்கான திட்டம் வகுக்கப்படும். ஒன்று இந்த யாத்திரை ஜூன் மாதத்திற்குள் தொடங்கப்படலாம் அல்லது நவம்பருக்கு முன் தொடங்கப்படலாம். இது குறித்த முழு விவரம் இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும்.'' இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x