

இரண்டாம் கட்ட ‘புதுமைப் பெண்’ திட்டம் தொடக்கம்: ஒரு லட்சத்து நான்கு ஆயிரத்து 347 மாணவிகள் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்ட “புதுமைப் பெண்” திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமைத் தொடங்கி வைத்தார். புதுமைப் பெண் திட்டத்தின் முதற்கட்டத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும், இத்திட்டத்தின் மூலம் இடைநிற்றலில் இருந்து 12 ஆயிரம் மாணவிகள் மீண்டும் உயர் கல்வியில் சேர்ந்து பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “புதுமைப் பெண் திட்டத்தால் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை கடந்த ஆண்டை விட 27 சதவீதம் அதிகமாகி இருக்கிறது” என்று தெரிவித்தார்.
ஆவின் காலிப்பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு: ஆவின் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மேலாளர், துணை மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய ஆவின் நிறுவனத்தில் உள்ள 26 வகையான 322 காலிப்பணியிடங்களை இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
“என் மீதான இந்தியாவின் நம்பிக்கை...” - மோடி பேச்சு: “மோடி மீதான இந்தியாவின் நம்பிக்கை என்பது எதிர்க்கட்சிகளின் புரிதலுக்கு அப்பாற்பட்டது” என்று நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
‘பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருக’: காவிரி டெல்டாவில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு, காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு முழு இழப்பீட்டுத் தொகையை காப்பீடு நிறுவனங்களிடமிருந்து தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: தினகரன்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் எப்போதும் இல்லை. திமுக கூட்டணியை ஆதரிக்க மாட்டோம். அதிமுக கூட்டணியையும் ஆதரிக்க மாட்டோம். தீய சக்திகளையும் ஆதரிக்க மாட்டோம். துரோக சக்திகளையும் ஆதரிக்க மாட்டோம். இவர்களை எதிர்த்து தான் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது" என்றார்.
“ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே?” - கார்கே கேள்வி: குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை நாடாளுமன்றத்தில் பேசும்போது, “ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். கடந்த 9 ஆண்டுகளில் 18 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். எங்கே அந்த 18 கோடி வேலைவாய்ப்புகள்? அதைக்கூட விட்டுவிடுங்கள். அரசு துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. இதை எப்போது நிரப்புவீர்கள்?
தனியார் நிறுவனங்களில் அரசு 82 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. நமது நாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் 10 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். ஆனால், மத்திய அரசோ பொதுத் துறை நிறுவனங்களில் முதலீடுகளை செய்யாமல், அதானி போன்ற குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. ஆனால், தனியார் நிறுவங்களில் 30 ஆயிரம் பேர்தான் பணியாற்றுகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களுக்காக நாட்டு மக்கள் அதிக விலை கொடுக்க வேண்டி உள்ளது” என்றார்.
‘ராகுல் காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’: பிரதமர் நரேந்திர மோடியையும், தொழிலதிபர் அதானியையும் தொடர்புபடுத்தி நாடாளுமன்றத்தில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைத் தெரிவித்த ராகுல் காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகருக்கு பாஜக எம்.பி. நிஷிகந்த் துபே கடிதம் எழுதியுள்ளார்.
ஆளுநர் விவகாரம்: மத்திய அரசு கருத்து கூற மறுப்பு: தமிழக ஆளுநரிடம் நிலுவையிலுள்ள ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான சட்ட மசோதா மீது கருத்து கூற இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை புதன்கிழமை மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கான பதிலாக அரசு அளித்துள்ளது.
துருக்கி, சிரியாவில் பூகம்ப பலி 11,000 ஆக அதிகரிப்பு: துருக்கி, சிரியாவில் பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 8,500-க்கும் மேற்பட்டோரும், சிரியாவில் 2,500-க்கும் மேற்பட்டோரும் இதுவரை உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “இது காலத்திற்கு எதிரான ஓட்டம். நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு எங்களது மருத்துவக் குழுவை நாங்கள் அனுப்பி இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
சட்டத்தின் ஆட்சி இருப்பதே இந்தியா முன்னேற காரணம்: இம்ரான் கான்: இந்தியா முன்னேறுவதற்குக் காரணம், அங்கு சட்டத்தின் ஆட்சி இருப்பதுதான் என்றும், பாகிஸ்தானில் சட்டத்தின் ஆட்சி இல்லாமல் போகுமானால் அதற்கு எதிர்காலம் இருக்காது என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.