டெல்டாவில் நெற்பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருக: முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை
தஞ்சாவூர்: காவிரி டெல்டாவில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு, காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு முழு இழப்பீட்டுத் தொகையை காப்பீடு நிறுவனங்களிடமிருந்து தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சம்பா பருவத்தில் 10.50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, 4 லட்சம் ஏக்கர் அறுவடை முடிந்த நிலையில், கடந்த பிப்.1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 2.50 லட்சம் ஏக்கர் நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்து சேதமடைந்தன.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்களை அனுப்பி ஆய்வு செய்து, நிவாரணத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிவாரணம் விவசாயிகளுக்கு ஆறுதலை அளித்தாலும், பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை அந்த நிறுவனங்களிடமிருந்து முழுமையாக பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரீமியமாக ரூ.66.70 கோடி: டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவத்தில் பயிர்க் காப்பீடு செய்ய ரிலையன்ஸ் பொதுக் காப்பீடு நிறுவனம் மற்றும் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் பயிர்க் காப்பீடு நிறுவனம் ஆகியவை முன்வந்தன. இதில் ஏக்கருக்கு ரூ.539-ஐ பங்களிப்பு பிரீமியமாக விவசாயிகள் செலுத்தினர்.
அதன்படி கடந்த நவ.21-ம் தேதி வரை சம்பா பருவத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 3.10 லட்சம் ஏக்கருக்கு ரூ.16.70 கோடியை விவசாயிகள் பிரீமியத் தொகையாக செலுத்தியுள்ளனர். இதேபோல, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பிரீமியமாக விவசாயிகள் சார்பில் ரூ.50 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் முதல் சம்பா அறுவடை தொடங்கியதால், காப்பீடு நிறுவனம் ஆங்காங்கே சோதனை அறுவடைசெய்து வருகிறது. பல இடங்களில் மகசூல் நன்றாக இருந்ததாக கருதப்பட்ட நிலையில், திடீரென பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் முளைத்தும், கருப்பாக மாறியும் சேதமடைந்ததுடன், மகசூலும் பாதிக்கப்பட்டது.
41 இடங்களில் மட்டும்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 750 கிராமங்களில் சோதனை அறுவடை நடத்த வேண்டிய நிலையில், வெறும் 41 இடங்களில் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. எனவே, பயிர்க் காப்பீடு செலுத்தி பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர தமிழக அரசு முன் வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் மேலஉளூர் ப.ஜெகதீசன் கூறியதாவது: அரசு அறிவித்த நிவாரணம் என்பது ஓரளவுக்கு ஆறுதலாக உள்ளது. இருந்தாலும் விவசாயிகள் செலுத்திய பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
இதைப் பெற்றுத் தர தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிப்புகளின் தன்மையை அரசு உணர்ந்துள்ளதால் சோதனை அறுவடையை கைவிட்டுவிட்டு உடனடியாக பயிர்க் காப்பீடு செலுத்திய அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் காப்பீடு நிறுவனங்கள் சோதனை அறுவடையை முடிப்பதற்குள் மழை பெய்துவிட்டது. இதையடுத்து, சோதனை அறுவடை நடத்திய கிராமங்களில் மீண்டும் நடத்த வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர். காப்பீடு நிறுவனங்கள் சோதனை அறுவடையை முடிப்பதற்குள் மழை பெய்து விட்டது. எனவே, சோதனை அறுவடை நடத்திய கிராமங்களில் மீண்டும் நடத்த வேண்டும்.
