Published : 06 Feb 2023 02:17 PM
Last Updated : 06 Feb 2023 02:17 PM

ஆம் ஆத்மி - பாஜக மோதலால் 3-வது முறையாக டெல்லி மேயர் தேர்தல் ரத்து

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பாஜக - ஆம் ஆத்மி உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் 3-வது முறையாக மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

டெல்லி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இதில், டெல்லியில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், 15 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளில் செல்வாக்கு செலுத்தி வந்த பாஜக பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதனிடையில், டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா, மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக 10 நியமன உறுப்பினர்களை நியமித்திருக்கிறார்.

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால், மேயர் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெரும் விதமாக துணை நிலை ஆளுநர் செயல்படுகிறார் என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டி வருகிறது. மேலும், ஆல்டர்மேன் என்று அழைக்கப்படும் இந்த நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று (பிப்.6) டெல்லி மாமன்றம் கூடியதும் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சத்ய சர்மா நியமன உறுப்பினர்களும், மேயர், துணை மேயர், நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். முன்னதாக, இந்த மூன்று தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த கவுன்சிலர் முகேஷ் கோயல் ஆல்டர்மென்கள் வாக்களிக்க முடியாது என்றார். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக கவுன்சிலர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால், ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் மாமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மேயர் தேர்தலும் 3-வது முறையாக ரத்து செய்யப்பட்டது.

மாமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சுரபா பரத்வாஜ், "நியாமான முறையில் நடந்தால் மட்டுமே மேயர் தேர்தல் இன்று நடைபெறும். அவைத் தலைவர் மேயர் துணை மேயர், நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் முறைகேடு செய்ய நினைக்கிறார். அதனால்தான் மூன்று தேர்தலையும் ஒன்றாக நடத்த விரும்புகிறார்" என்று குற்றம்சாட்டினார்.

முன்னதாக, ஜனவரி 6, 24 ஆகிய இரண்டு நாட்களிலும் இதேபோல் நடந்த பாஜக - ஆம் ஆத்மி மோதல்களால் இரண்டு முறையையும் புதிய மேயரைத் தேர்வு செய்யாமல் மாமன்றத் தலைவர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் 1957-ன் படி, டெல்லி உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் கூடும் முதல் மாமன்றக் கூட்டத்தில் மேயர், துணை மேயரைத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் இன்னும் மேயர் தேர்ந்தெடுக்கப்படவில்லை

டெல்லி மாநகராட்சி அவையில் 205 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவை தவிர, டெல்லியைச் சேர்ந்த பாஜகவின் 7 மக்களவை உறுப்பினர்கள், ஆம் ஆத்மி கட்சியின் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள், டெல்லி சபாநாயகரால் பரிந்துரைக்கப்பட்ட 14 எம்எல்ஏக்கள் மேயர் தேர்தலில் பங்கேற்கின்றனர். டெல்லியுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சியும், 104 வார்டுகளில் பாஜகவும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x