Published : 06 Feb 2023 02:00 PM
Last Updated : 06 Feb 2023 02:00 PM

''நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மக்களுக்கு உதவத் தயார்'' - பிரதமர் மோடி

பெங்களூரு: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மக்களுக்கு உதவத் தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

துருக்கியில் இன்று அதிகாலை நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அண்டை நாடான சிரியாவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் 'இந்திய எரிசக்தி வாரம் 2023' நிகழ்ச்சியை பெங்களூருவில் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''துருக்கியில் நேரிட்ட நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. துருக்கியின் அண்டை நாட்டையும் இந்த நிலநடுக்கம் பாதித்துள்ளது. இந்த சூழலில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்தியாவின் 140 கோடி மக்களின் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது'' என தெரிவித்தார்.

இந்திய எரிசக்தி வாரம் 2023: மேலும் அவர் கூறியதாவது: ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் 'இந்திய எரிசக்தி வாரம் 2023' நிகழ்ச்சிகளை தொடங்கிவைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொழில்நுட்பம், திறமை, புதுமை ஆகியவற்றின் சக்தியால் நிரம்பியுள்ள நகரம் பெங்களூரு. இங்கே இளைஞர் சக்தி நிறைந்திருப்பதை என்னைப் போலவே நீங்களும் காண முடியும். ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் இந்தியா நடத்தும் முதல் மிகப் பெரிய எரிசக்திக்கான நிகழ்ச்சி இது. இதில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

21ம் நூற்றாண்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் எரிசக்தி துறைக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. புதிய எரிபொருள்களின் வளர்ச்சிக்காகவும், எரிசக்தி மாற்றத்திற்காகவும் வலிமையாகக் குரல் கொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. வளர்ந்த நாடாக உருவெடுக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் இந்தியா, ஏராளமான எரிசக்தி வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. 2023ம் ஆண்டுக்கான உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது. அதில், உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் ஆகிய சவால்களுக்கு மத்தியில் ஒளிரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வெளியே எத்தகைய சூழல் இருந்தாலும், எத்தகைய சவால்களை அவை ஏற்படுத்தினாலும் அவற்றை எதிர்கொள்வதற்கான ஆற்றல் இந்தியாவுக்கு இருக்கிறது. நிலையான மற்றம் தீர்க்கமான அரசு, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள், கீழ் மட்ட அளவில் ஏற்படுத்தப்பட்டு வரும் சமூக - பொருளாதார முன்னேற்றங்கள் ஆகியவையே இந்த ஆற்றலுக்குக் காரணமாக இருக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள 'இந்திய எரிசக்தி வாரம் 2023' நிகழ்ச்சிகள் நாளை மறுநாள் வரை நடைபெற உள்ளன. எரிசக்தித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்தும், இத்துறையில் இந்தியாவிற்கு உள்ள வாய்ப்புகள் குறித்தும் இதில் விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது. ஜி20 நாடுகளைச் சேர்ந்த 30 அமைச்சர்கள், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்சி அரங்குகள், 500க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x