Published : 10 Jan 2023 03:52 PM
Last Updated : 10 Jan 2023 03:52 PM

இந்திய ஒற்றுமை யாத்திரையை சீக்கியர்கள் புறக்கணிக்க வேண்டும்: பாஜக

பஞ்சாப் பொற்கோவிலில் வழிபட்ட ராகுல் காந்தி

சண்டிகர்: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நாளை பஞ்சாபில் தொடங்க உள்ள நிலையில், அந்த யாத்திரையை சீக்கியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் விடுத்துள்ள அறிக்கையில், ''1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரத்திற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு. சீக்கிய எதிர்ப்புதான் காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகம். ஆபரேஷன் ப்ளூஸ்டார் எனும் ராணுவ நடவடிக்கை மூலம் சீக்கியர்களின் தங்க கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பி காங்கிரஸ் அரசு எடுத்த நடவடிக்கைகளை பஞ்சாப் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். சீக்கிய ஒற்றுமைக்கு இதுவரை காங்கிரஸ் எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

அதேநேரத்தில், சிக்கியர்களுக்காக பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சீக்கியர்களின் 10-வது குருவான குரு கோபிந்த் சிங்கின் இரண்டு குழந்தைகள் மொகலாயர் ஆட்சிக் காலத்தில் உயிரோடு மண்ணில் புதைக்கப்பட்ட தினமான டிசம்பர் 26-ஐ, வீர் பால் திவஸ் என்ற பெயரில் மத்திய அரசு அனுசரித்து வருகிறது. இதன்மூலம் அவர்களின் தியாகத்தை நாடு நினைவுகூர்ந்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித தலமான கர்த்தார் குருத்வாராவுக்கு இந்தியாவில் இருந்து தனிப் பாதை ஏற்படுத்தி, இந்தியர்கள் குறிப்பாக சீக்கியர்கள் சென்று வர நடவடிக்கை எடுத்துள்ளது. ஆப்கனிஸ்தானில் ஸ்ரீகுரு கிரந்த சாஹிப் எனும் புனித நூலை பத்திரமாக இந்தியா கொண்டு வர பாஜக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், சீக்கியர்களுக்காக காங்கிரஸ் என்ன செய்தது?

ராகுல் காந்தி தற்போது மேற்கொண்டு வரும் யாத்திரைக்கு பொது நோக்கம் என்று எதுவுமில்லை. அவருக்கு இருக்கும் பதவி வெறிதான் இந்த யாத்திரைக்கு காரணம். தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவும், தான் பிசியாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளவுமே ராகுல் காந்தி இந்த யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். எனவே, சீக்கியர்கள் ராகுல் காந்தியின் இந்த யாத்திரையை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொற்கோவிலில் வழிபாடு: இதனிடையே, ராகுல் காந்தி பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலில் இன்று வழிபாடு மேற்கொண்டார். அவரது யாத்திரை நாளை பஞ்சாப்பில் நடைபெற உள்ள நிலையில், இன்று அவர் வழிபாடு மேற்கொண்டார். பின்னர் அங்கு நடைபெற்ற பஜனையிலும் அவர் கலந்து கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x