Published : 10 Jan 2023 03:17 PM
Last Updated : 10 Jan 2023 03:17 PM

ஜோஷிமத் பேரிடர் | ’‘எல்லா அவசர பிரச்சினைகளுக்கும் உச்ச நீதிமன்றம் மூலமே தீர்வு காண வேண்டியதில்லை” - தலைமை நீதிபதி

ஜோஷிமத் பகுதியில் ஏற்பட்டிருக்கும் விரிசல் | கோப்புப்படம்

புதுடெல்லி: "நாட்டின் ஒவ்வொரு அவசரப் பிரச்சினையும் நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு காணப்பட வேண்டும் என்பது இல்லை" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு வெடிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவினை உடனடியாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதற்கு இன்று பதில் அளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்/சந்திரசூட், "நாட்டிலுள்ள ஒவ்வொரு முக்கியமான பிரச்சினைக்கும் நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே தீர்வு காணப்பட வேண்டும் என்பது இல்லை. அந்தப் பிரச்சினைகளைக் கையாள ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் இருக்கின்றன. அவர்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு அவர்கள் அதற்கு தீர்வு காண்பார்கள். இந்த மனுவை ஜனவரி 16-ம் தேதி விசாரணை செய்யலாம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஸ்வாமி அவிமுக்தேஷ்வரானந்த சரஸ்வதி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் திங்கள்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டபோது தலைமை நீதிபதி விசாரணை தேதியைத் தெரிவிப்பதை தவிர்த்தார்.

ஸ்வாமி அவிமுக்தேஷ்வரானந்த சரஸ்வதி கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்திருந்த மனுவில், ‘ஜோஷிமத் பகுதியில் வீடுகள், நிலகளில் நடைபெறும் நிலச்சரிவு நிலவெடிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை திட்டங்களின் கீழ் நிவாரணம் வழங்க வேண்டும். ஜோஷிமத் குடியிருப்புவாசிகளுக்கு அதனைச் செய்யுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

மனித உயிர்கள் மற்றும் அவர்களின் சுற்றுச்சூழல் வாழ்வியலைப் பணயம் வைத்து எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை இல்லை. அப்படி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்போது அதனை போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்துவது மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் கடமை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நிலச்சரிவின் காரணமாக உயிருக்கும் உடமைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் ஜோஷிமத் பகுதி மக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்புலம்: உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் இமயமலையின் அடிவாரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரம், பத்ரிநாத் கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயிலாகும். வீடுகள், விடுதிகள், ஓட்டல்கள் உட்பட சுமார் 4,500 கட்டிடங்கள் ஜோஷிமத் நகரில் உள்ளன. சுமார் 30,000 பேர் வசிக்கின்றனர். கடந்த டிசம்பர் இறுதியில் ஜோஷிமத் நகரின் பல்வேறு வீடுகள், வணிக நிறுவன கட்டிடங்களில் மிகப்பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. தொடர்ந்து விரிசல்கள் பெரிதான நிலையில் ஜோஷிமத் பகுதி பேரிடர் அபாயம் மிக்க பகுதியாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் வீடுகள் நிபுணர்களின் மேற்பார்வையில் இடிக்கப்படுகிறது. முன்னதாக, ஆபத்தான பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x