Published : 09 Jan 2023 04:01 PM
Last Updated : 09 Jan 2023 04:01 PM

“அந்த ராகுல் காந்தி இப்போது இல்லை...” - ராகுலின் ஹரியாணா பேட்டியும் நெட்டிசன்கள் ரியாக்‌ஷனும்

சண்டிகர்: “அந்த ராகுல் காந்தி இப்போது இல்லை” என ஹரியாணா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்குண்டுள்ள ராகுல் காந்தி அளித்த பேட்டி ஒன்று கவனம் பெற்றுள்ளது.

பேட்டியின்போது செய்தியாளர் ஒருவர், ‘இந்த யாத்திரை உங்கள் அடையாளத்தை மாற்றி இருக்கிறதா?’ என்று வினவினார். அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, "உங்கள் மனதில் என்ன மாதிரியான ராகுல் காந்தி அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறாரோ அந்த ராகுல் காந்தியை நான் கொலை செய்துவிட்டேன். அந்த ராகுல் என் நினைவில் இல்லை. அவர் மறைந்துவிட்டார். இப்போது நீங்கள் பார்க்கும் ராகுல் காந்தி பழைய ராகுல் இல்லை. இது புரிய வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் இந்து தர்மம் பற்றி படிக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்குப் புரியும்.

நான் என் மனதில் எந்த அடையாளமாகவும் இல்லை. ஆனால் பாஜகவினரின் சிந்தனையில், புத்தியில் உள்ளேன். எனக்கென்று என்ன பிம்பம் இருக்கிறது என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எனக்கு எந்த பிம்பம் பற்றியும் அக்கறையும் இல்லை. உங்களுக்கு என்ன மாதிரியான பிம்பத்தில் என்னை உருவகப்படுத்த விருப்பமோ நீங்கள் அப்படியே செய்யலாம். எனக்கு அதைப் பற்றி கவலையில்லை. நான் என் பணியை செய்ய வேண்டும் என்று மட்டும் நினைக்கிறேன்" என்றார்.

அவரது இந்தப் பேட்டி இணையத்தில் பல்வேறு பின்னூட்டங்களைப் பெற்றுள்ளது. இந்திய ஒற்றுமை யாத்திரை மூலம் ராகுல் காந்தி மீதான மக்கள் அபிமானம் ஒருபுறம் அதிகரித்து வரும் சூழலில், அவருடைய இந்தப் பேச்சு குழப்பம் நிறைந்ததாக இருப்பதாக சிலர் கூறியுள்ளனர்.

இன்னொரு நபர், ராகுல் காந்தி மீது பப்பு என்ற பிம்பத்தை கட்டமைக்க பாஜக ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்ததாகக் கூறுகின்றனர். அப்படியெல்லாம் செய்திருக்கவே தேவையில்லை. அவருடைய குழப்பமான பேட்டிகளே போதும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, அந்தப் பேட்டியில் அவர், “எனது தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரைக்கு நாடு முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமூகத்தில் பரப்பப்படும் வெறுப்பு மற்றும் அச்சத்திற்கு எதிரானது என்பதை இந்த பாத யாத்திரை வலியுறுத்துகிறது. அத்துடன் வேலையின்மை மற்றும் பணவீக்கத்திற்கு எதிரானதும்கூட. நாட்டின் உண்மையான குரலை மக்கள் கேட்க வைப்பதே யாத்திரையின் நோக்கமாகும்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறேன். தற்போது ஹரியாணா வழியாக செல்கிறேன். இதுவரையிலான பயணத்தில் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. இத்தகைய ஒரு பயணத்தில்தான் நாட்டின் இதயம் சொல்வதை காதுகொடுத்து கேட்கமுடிகிறது. அதாவது நாட்டின் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் பேசமுடிகிறது. யாத்திரைக்கு ஹரியானாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது ஆற்றல்மிக்க, உற்சாகமான ஒரு வரவேற்பு ஆகும்.

நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுகிறது, நாட்டின் செல்வம், ஊடகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் சிலரால் கட்டுப்படுத்தப்படுகிறது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கெல்லாம் எதிரானதுதான் இந்திய ஒற்றுமை யாத்திரை. இந்த யாத்திரைக்கு மற்றொரு நோக்கமும் உள்ளது. அது ஒரு "தபஸ்யா" போன்றது ஆகும். அதாவது வெற்றிக்கான கடும் தவம் என்பார்களே அதுதான்'' என்று ராகுல் கூறியிருந்தார்.

ஆனால், அந்தப் பேட்டியில் அவர் பேசிய குறிப்பிட்ட இந்த விஷயம் இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x