Published : 06 Jan 2023 03:42 PM
Last Updated : 06 Jan 2023 03:42 PM

“மணிப்பூரை தீவிரவாதம் இல்லாத மாநிலம் ஆக்கியது பாஜக அரசு” - அமித் ஷா பெருமிதம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா | கோப்புப்படம்

இம்பால்: "ஆளும் பாஜக அரசு மணிப்பூரை தீவிரவாதம், போராட்டங்களில் இருந்து விடுவித்து மாநிலத்தில் வளர்ச்சியைக் கொண்டுவந்துள்ளது" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங்க் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று காணொலி காட்சி மூலமாக, ரூ.300 கோடி மதிப்பிலான 12 திட்டங்களை தொடங்கி வைத்து, ரூ.1,007 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “பாஜக அரசு மாநிலத்தில் கிளர்ச்சியை ஒடுக்கி, ஆறு மாவட்டங்களில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டம் 1958-ஐ நீக்கியுள்ளது. மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியின்போது இங்கு பயங்கரவாத சூழல் நிலவியது. தற்போது சிறந்த ஆட்சி நடக்கும் சிறிய மாநிலமாக மணிப்பூர் மாறியிருக்கிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த எட்டு ஆண்டுகளுக்குள்ளாக வடகிழக்கு மாநிலங்களில் ரூ.3.45 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி 51 முறை இந்த பிரந்தியங்களுக்கு வருகை புரிந்துள்ளார். முதல்வர் என்.பீரேன் சிங் அரசு போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அடுத்த தேர்தலுக்குள் பாஜக அரசு மணிப்பூரை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும்" என்று அவர் பேசினார்.

அமித் ஷா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த திட்டங்களில் மணிப்பூரின் சங்கைத்தலில் அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பியன் பூங்கா, ஜவகர்லால் நேரு மருத்துவ அறிவியல் மையத்தில் தனி வார்டு, மோஹர் நகரத்தில் தண்ணீர் விநியோதத்திட்டம், காங்க்லா துறைமுகத்தின் கிழக்குப்பகுதியில் நோங்போக் தோங் பாலம், காங்குய் குகையில் குகை சுற்றுலா திட்டம் ஆகியவைகள் அடங்கும்.

அதேபோல், இந்தியா-மியான்மர் இடையேயான சர்வதேச எல்லைப்பகுதியில் 34 போஸீல் காவல் மையங்கள், தேசிய நெடுஞ்சாலை 34 நாளில் 6 போலீஸ் காவல் மையங்கள் என 40 போலீஸ் காவல் மையங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

முன்னதாக காலையில், மொய்ராங்கில் உள்ள இந்திய தேசிய ராணுவத்தின் தலைமையகத்தில் தேசிய கொடியேற்றினார். சுராசந்புரில் மருத்துவக்கல்லூரியை தொடங்கி வைத்தார். இம்பாலின் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த போலோ விளையாட்டு வீரரின் 120 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x