Last Updated : 31 Dec, 2022 06:14 AM

 

Published : 31 Dec 2022 06:14 AM
Last Updated : 31 Dec 2022 06:14 AM

‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலி - காசி விஸ்வநாதர் கோயிலில் தேவாரம், திருவாசகம் ஓத தமிழக பாஜக கடிதம்

புதுடெல்லி: காசி விஸ்வநாதர் கோயிலில் தேவாரம், திருவாசகம் ஓதக் கோரிகோயில் நிர்வாக அறங்காவலருக்கு தமிழக பாஜக கடிதம் எழுதியுள்ளது. கடந்த 22-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தியின் தாக்கமாக இக்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பழம்பெருமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தரும் இக்கோயிலில் தேவாரமும் திருவாசகமும் பாடப்படுவதில்லை. மாறாக, அக்கோயிலின் அன்றாட பூஜைகளில் சுக்லயஜுர் வேதம் பாடப்படுகிறது. மாலை ஏழு மணிக்கு நடைபெறும் சப்தரிஷி பூஜையில் கூடுதலாக சம்ஸ்கிருத ஸ்தோத்திரங்களை சங்கீதமாகப் பாடுகின்றனர். இந்த பூஜைகளில் கலந்துகொள்ளும் தமிழர்கள் இவற்றை புரிந்தும், புரியாமலும் கேட்டுச் செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 15-ல் இக்கோயிலில் இசைஞானி இளையராஜா நடத்திய பக்தியிசை கச்சேரியில் முதல்முறையாக தேவாரமும் திருவாசகமும் பாடினார். இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த 22-ம் தேதி செய்தி வெளியானது. அதில் காசி விஸ்வநாதர் கோயிலில் தொடர்ந்து தேவாரமும் திருவாசகமும் பாட வேண்டியதன் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டிருந்தது. இந்த செய்தியின் தாக்கமாக தமிழக பாஜக சார்பில் காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தமிழக பாஜகவின் ஆன்மீகம் மற்றும் ஆலயங்கள் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் எம்.நாச்சியப்பன் கடந்த 22-ம் தேதிஎழுதியுள்ள கடிதத்தில், “வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமம் ஒரு மாத நிகழ்ச்சிக்கு தாங்கள் அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி. அப்போது சிவனின் கருவறைக்கு முன்பாக இசைஞானி இளையராஜா தமிழில் பாடிய தேவாரம், திருவாசகம் பாடல்களை கேட்டு அங்கிருந்த தமிழர்கள் இன்புற்றனர். இவை தொடர்ந்து கோயிலின் அனைத்து பூஜைகளிலும் ஓதப்பட வேண்டும். இவ்வாறு செய்வதால் அங்கு தமிழ் மொழிக்கும், அப்பாடல்களின் ஓதுவார்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும். மேலும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் முன்னிறுத்தப்பட்ட வாரணாசி – தமிழகம் இடையிலான உறவும் மேம்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் ‘இந்து தமிழ்’ நாளிதழின் செய்தியையும் இணைத்துள்ளார்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, இந்தக் கடிதத்தின் நகல்கள் வாரணாசி தொகுதி எம்.பி.யான பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சைவ சமயக் கடவுளான சிவபெருமானுக்காக 12 திருமறைகள் பாடப்பட்டன. இவற்றில் முதல் ஏழு திருமறைகள் தேவாரம் என்று அழைக்கப்படுகிறது.

இப்பாடல்கள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் மறைத்து வைக்கப்பட்டன. அக்கோயில் பூசாரிகளான தீட்சிதர்கள் இவற்றைரகசிய அறையில் பூட்டி வைத்திருந்தனர். இதை கேட்பவர்களிடம், "தானே நேரில் வந்தால் மட்டும் தரவேண்டும் என சிவபெருமான் கூறியிருப்பதால் வேறு எவருக்கும் தர முடியாது" என்று தீட்சிதர்கள் கூறிவந்தனர்.

இந்த தகவல், பேரரசர் முதலாம் ராஜராஜ சோழனுக்கு (கி.பி. 985-1012) அவரது குருவான நாதமுனி என்பவர் மூலம் தெரியவந்தது. இதை எப்படியும் மீட்க வேண்டும்என முடிவெடுத்தார் மாமன்னர் ராஜராஜன். இதற்காக பேரரசர் ராஜராஜன், சிவனின் ஒரு சிலையை செய்து அதற்கு திரையிட்டு சிதம்பரம் கோயிலுக்குள் எடுத்துச்சென்றார். கோயிலில் இருந்த தீட்சிதர்களிடம் தன் மீதானப் பாடல்களின் ஓலைச்சுவடிகளை கேட்க சிவனே நேரில் வந்திருப்பதாக பேரரசர் தெரிவித்தார்.

வேறுவழியின்றி ஓலைச் சுவடிகளை, தீட்சிதர்கள் தங்கள் பேரரசரிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட தேவாரம் மற்றும் திருவாசகத்தை சிவன் கோயில்களில் தினந்தோறும் பாட ஓதுவார்களை பேரரசர் ராஜராஜன் நியமித்தார். அன்றுமுதல் தேவாரமும், திருவாசகமும் தமிழகத்தின் சிவன்கோயில்களில் பாடப்பட்டு வருகின்றன. இவற்றை வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலிலும் பாட வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

தேவாரம் மற்றும் திருவாசகத்தை சிவன் கோயில்களில் தினந்தோறும் பாடஓதுவார்களை பேரரசர் ராஜராஜ சோழன் நியமித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x