Published : 30 Dec 2022 07:30 PM
Last Updated : 30 Dec 2022 07:30 PM

ராகுல் காந்தியின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும்: டெல்லி போலீஸ்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை | கோப்புப் படம்

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளும்போது ராகுல் காந்தியின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், டெல்லி போலீசார் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில், டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, ராகுல் காந்திக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது ராகுல் காந்திக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், அங்கீகரிக்கப்படாத எவரும் ராகுல் காந்தியை நெருங்க முடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் யாத்திரையின்போது கனமான கயிறு மூலம் அவருக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ராகுல் காந்திக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி இருந்தது. குறிப்பாக, ராகுல் காந்தியின் யாத்திரை டெல்லியை அடைந்த டிசம்பர் 24ம் தேதி டெல்லி போலீசார் பாதுகாப்பு வழங்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது. அடுத்ததாக, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கு இந்திய ஒற்றுமை யாத்திரை செல்ல உள்ளதால் ராகுல் காந்திக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்தக் கடிதத்திற்கு பதில் அளித்த மத்திய துணை ராணுவப் படை, ராகுல் காந்திதான் பாதுகாப்பு விதிகளை அடிக்கடி மீறுவதாகக் குற்றம் சாட்டி இருந்தது. கடந்த 2020 முதல் இதுவரை அவர் 113 முறை பாதுகாப்பு விதிகளை மீறியதாக அது குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x