Published : 21 Dec 2022 04:50 AM
Last Updated : 21 Dec 2022 04:50 AM

கபடி விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும்: பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

புதுடெல்லி: சிறுதானியங்கள், கபடி விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

பாஜக எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மக்களவை, மாநிலங்களவையை சேர்ந்த பாஜக எம்.பி.க்கள், மூத்த அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று வரும் 2023-ம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. சபைஅறிவித்துள்ளது. நமது நாட்டின் 85% குறு, சிறு விவசாயிகள் சிறுதானிய சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். சிறுதானியங்களில் அதிக ஊட்டச் சத்துகள் உள்ளன.

பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் சிறுதானியங்களை ஊக்குவிக்க வேண்டும். எம்.பி.க்கள் நடத்தும் கூட்டங்கள், விழாக்களில் சிறுதானிய உணவு வகைகளைப் பரிமாற வேண்டும். அங்கன்வாடி, பள்ளிகள், வீடுகள், அரசு அலுவலகங்களில் சிறுதானிய உணவு வகைகளை பரிமாற ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் குறு,சிறு விவசாயிகள் பலன் அடைவார்கள். மக்களின் உடல்நலனும் மேம்படும்.

கடந்த டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையொட்டி அடுத்த ஓராண்டுக்கு நாடு முழுவதும் மாநாடு, கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதில் சிறுதானிய உணவு வகைகள் இடம்பெறும்.

பாஜக சார்பில் நாடு முழுவதும் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும். இந்த விளையாட்டுப் போட்டிகளில் கபடி உள்ளிட்ட இந்திய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவரவர் தொகுதிகளில் இந்திய விளையாட்டுகளை ஊக்குவிக்க பாஜக எம்.பி.க்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரம் குறித்து பாஜகஎம்.பி.க்கள் கூட்டத்தில் விரிவாகவிவாதிக்கப்பட்டதாகக் கூறப்படு கிறது. வரும் 2024-ம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க இப்போதே பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அதோடு அடுத்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பாகவும் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குஜராத் வெற்றி விருந்து: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களைக் கைப்பற்றி பாஜக வரலாறு காணாத வெற்றி பெற்றது. 7-வது முறையாக அந்தமாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதையொட்டி குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் டெல்லியில் நேற்றிரவு பிரம்மாண்ட விருந்து அளித்தார். இதில்பாஜக தலைவர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடியின் அறிவுரைப்படி இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

எம்.பி.க்கள் நடத்தும் கூட்டங்கள், விழாக்களில் சிறுதானிய உணவு வகைகளை பரிமாற வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x