Published : 21 Dec 2022 04:35 AM
Last Updated : 21 Dec 2022 04:35 AM

135 கோடி மக்களும் நம்மை பார்த்து சிரிக்கிறார்கள்; கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் - மாநிலங்களவைத் தலைவர் வலியுறுத்தல்

ஜெகதீப் தன்கர்

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையில் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நமது செயலைப் பார்த்து 135 கோடி மக்களும் சிரிக்கின்றனர். நாம் குழந்தைகள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் கூறினார்.

ராஜஸ்தானின் அல்வர் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வின்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆர்எஸ்எஸ், பாஜக குறித்து தரக்குறைவாகப் பேசினார். கார்கே பேசும்போது, ‘‘காங்கிரஸ் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது. நாட்டின் ஒற்றுமைக்காக இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தங்களது உயிரை தியாகம் செய்தனர். எங்கள் கட்சி தலைவர்கள் நாட்டு ஒற்றுமைக்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். பாஜக எதையும் இழக்கவில்லை. உங்கள் வீட்டில் உள்ள நாய் கூட நாட்டுக்காக இறந்ததா?’’ என்றார்.

பாஜகவை தாக்கி கார்கே பேசியபோது நாய் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் பாஜக எம்.பி.க்கள் நேற்று மாநிலங்களவையைில் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

மல்லிகார்ஜுன கார்கே கூறியகருத்துக்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதற்கு காங்கிரஸ் தரப்பில் எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

மன்னிப்பு கேட்க வேண்டும்: நாகரீகமற்ற வகையில் மனதை புண்படுத்தும் வார்த்தையை பயன்படுத்தியதற்காக பாஜகவிடமும், நாடாளுமன்றத்திடமும், நாட்டு மக்களிடமும் கார்கே மன்னிப்பு கேட்கவேண்டும் என மாநிலங்களவையில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்ட குடியரசுத்துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர், இந்த கருத்து நாடாளுமன்றத்துக்கு வெளியே கூறப்பட்டதாக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “நாட்டில் உள்ள 135 கோடி மக்களும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் யாரோ எதையோ பேசியிருக்கலாம். நீங்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவையில் உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்ளவேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் நமக்கு மிகவும் கெட்ட பெயரை ஏற்படுத்தித் தரும். நமது செயல்பாடுகளால் நாடாளுமன்றத்துக்கு வெளியே உள்ள மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாடாளுமன்ற கடமைகளைச் செய்யும் போது நான் யார் பக்கமும் நிற்க மாட்டேன். அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ அதைச் செய்வேன்" என்றார்.

இதற்கிடையே தனது கருத்துக்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். நான் சொன்ன வார்த்தைகள் நாடாளுமன்றத்துக்கு வெளியேதான் என்றும், அது தொடர்பாக இங்கு மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கார்கே தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x