Published : 18 Dec 2022 07:15 PM
Last Updated : 18 Dec 2022 07:15 PM

எல்லாம் சரியாகத்தான் இருக்கிறதா?- சீன ஊடுருவல் குறித்து கேஜ்ரிவால் கேள்வி

புதுடெல்லி: சீனா தொடர்ந்து எல்லையில் அத்துமீறி வரும் சூழலில் அந்நாட்டை தண்டிப்பதற்குப் பதிலாக பிரதமர் நரேந்திர மோடி அதற்கு பரிசளித்து வருகிறார் என்று சாடியுள்ளார் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால். சீன எல்லை பிரச்சினையில் எல்லாம் சரியாக இருப்பதுபோன்ற பிம்பத்தை பாஜக அரசு உருவாக்க முற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், எல்லையில் அன்றாடம் சீன அத்துமீறல்கள் அதிகரிக்கிறது. ஆனால் மத்திய அரசோ எல்லாம் நலமே என்ற பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல 2020-21 நிதியாண்டில் நாம் சீனாவிடமிருந்து 65 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளோம். 2021-22 நிதியாண்டில் நாம் இதுவரை 95 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்திருக்கிறோம். சீனா தொடர்ந்து எல்லையில் அத்துமீறி வரும் சூழலில் அந்நாட்டை தண்டிப்பதற்குப் பதிலாக பிரதமர் நரேந்திர மோடி அதற்கு இவ்வாறாக பரிசளித்து வருகிறார். நம்மால் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க முடியாதா? பாஜக அரசுக்கு நமது வீரர்கள் மீது அக்கறையில்லையா?

ராகுல் குற்றச்சாட்டு: முன்னதாக இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அதன் 100-வது நாளை முன்னிட்டு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் "இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது. ஆனால், இதனை நமது அரசு ஏற்க மறுக்கிறது. இந்த உண்மையை அரசு மறைத்து வருகிறது" என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் ப்ரஹலாத் ஜோஷி, "ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து காங்கிரஸ் நிதி பெற்றுள்ளது. ராகுல் காந்தி பேசுவதை எல்லாம் சட்டை செய்யத் தேவையில்லை. நேருவின் காலத்தில் நம் நிலம் சீனாவின் கைவசம் சென்றதெல்லாம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்" என்று கூறியிருந்தார்.

ராஜ்நாத் சிங் விளக்கம்: சீன எல்லை பிரச்சினை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து எழுப்பப்பட்ட நிலையில், "சீன படைகள் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே அத்துமீற முயன்றது. ஆனால் இந்தியப் படைகள் உரிய பதிலடி கொடுத்தன. இரு தரப்பிலுமே காயங்கள் ஏற்பட்டன. நம் தரப்பில் கடுமையான காயங்கள் ஏதுமில்லை. இந்தியப் படைகள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் திறம்பட இயங்குகின்றன. இனியும் இயங்கும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சீன எல்லை பிரச்சினையில் எல்லாம் சரியாக இருப்பதுபோன்ற பிம்பத்தை பாஜக அரசு உருவாக்க முற்படுவதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x