Published : 22 Nov 2022 12:31 PM
Last Updated : 22 Nov 2022 12:31 PM

இந்தியாவை வளர்ந்த நாடாக்க இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும்: பிரதமர் மோடி

பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

'ரோஜ்கர் மேளா' எனும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 71,056 பேருக்கு வேலைவாய்ப்புக்கான கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார். வேலைவாய்ப்பைப் பெற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வாயிலாக புதுடெல்லியில் இருந்தவாறு பேசினார்.

அப்போது அவர், "நீங்கள் அனைவரும் மத்திய அரசின் பிரதிநிதிகளாக பணியாற்றப் போகிறீர்கள். உங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. உங்களுக்கான இந்த வாய்ப்பு ஒரு சிறப்பான தருணத்தில் கிடைத்திருக்கிறது. ஆம், நாட்டின் அமிர்த காலத்தில் உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்று நாட்டு மக்களாகிய நாம் உறுதி எடுத்திருக்கிறோம். இதை அடைவதற்கு நீங்கள் அனைவரும் சாரதியாக மாறப்போகிறீர்கள்.

கரோனா பெருந்தொற்று காரணமாகவும், உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாகவும் உலகின் பல பகுதிகளில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்காத சூழல் நிலவுகிறது. வளர்ந்த நாடுகளிலும்கூட இந்த நெருக்கடி இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், இதே காலம் இந்தியாவுக்கு மகத்தானதாக மாறி இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் மிகப் பெரிய வளர்ச்சி பெறப்போகிறது என்றும் புதிய வாய்ப்புகள் அதிகரிக்கப்போகிறது என்றும் பொருளாதார அறிஞர்களும் நிபுணர்களும் கூறுகிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டும்" என்றார்.

இதற்கு முன் கடந்த அக்டோபர் மாதத்தில் நிகழ்ந்த ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் 75 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆன்லைன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புக் கடிதம் வழங்கப்பட்டது. இதனை அடுத்து அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான கடிதம் நேரடியாகவும் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், பேராசிரியர்கள், செவிலியர்கள், செவிலியர் அலுவலர்கள், மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு வேலைவாய்ப்புக் கடிதம் பெற்று பணியில் சேரும் 75 ஆயிரம் பேருக்கும் ஆன்லைன் முறையில் கர்மயோகி ப்ராரம்ப் திட்டம் எனும் திட்டத்தின் கீழ், அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இதனை தொடங்கி வைத்தார்.

புதிதாக பணியில் சேருபவர்கள் பணி இடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவர்களின் பொறுப்புகள் என்னென்ன, அவர்களுக்கு உள்ள சலுகைகள் என்னென்ன, அவற்றை அவர்கள் எவ்வாறு பெற முடியும், அவர்கள் தங்களின் திறனை மேலும் வளர்த்துக்கொள்வதற்கு உள்ள வாய்ப்புகள் என்னென்ன உள்ளிட்டவை குறித்து இந்த பயிற்சியின்போது விளக்கப்படும் வகையில் கர்மயோகி ப்ராரம்ப் திட்டத்திற்கான பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x