Published : 22 Oct 2022 06:18 AM
Last Updated : 22 Oct 2022 06:18 AM

தினமும் 140 கி.மீ பயணம் செய்து பாடம் கற்பிக்கும் 93 வயது பேராசிரியை

பேராசிரியை சாந்தம்மாள்

விஜயநகரம்:படிக்கப் படிக்க கல்வி அறிவு பெருகும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் ஆந்திர பேராசிரியர் சிலுகூரி சாந்தம்மாள் (93). இந்தவயதில், ஊன்றுகோல் துணையுடன் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வடிவியல், ஒளியியல் பாடங்களை நுணுக்கமாக சொல் லிக் கொடுக்கிறார்.

இது குறித்து பேராசிரியர் சிலுகூரி சாந்தம்மாள் கூறியதாவது: கடந்த 1929 மார்ச் 8-ம் தேதி மசூலிப்பட்டினத்தில் பிறந்தேன். 5 மாத இருந்தபோதே எனது தகப்பனார் சீதாராமையா மரணம் அடைந்தார். அவர் நீதித்துறையில் பணியாற்றி வந்தார். ஆனால் தாயார் வனஜம்மாள் 104 வயது வரை வாழ்ந்தார். ஆந்திரா பல்கலைக்கழகத்தில் வடிவியலில் இப்போதைய பிஎச்.டிக்கு சமமான டிஎச்.டி முடித்தேன்.தொடர்ந்து 1956-ம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக சேர்ந்து பேராசிரியராக உயர்ந்தேன்.1989-ம் ஆண்டு எனது 60 வயதில் ஓய்வுபெற்றேன். இதற்குள் நான் பல பரிசோதனைகளை மேற்கொண்டேன். தொடர்ந்து கவுரவ பேராசிரியராக 6 ஆண்டு பணியாற்றினேன்.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு சென்று பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டேன். 2016-ல் மூத்த விஞ்ஞானிகள் பிரிவில் தங்க பதக்கம் பெற்றேன். நான் இதுவரை 12 மாணவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் பெற உதவி புரிந்துள்ளேன். எனது கணவர் சிலுகூரி சுப்ரமணிய சாஸ்திரி சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். இவர் கூட தெலுங்கு பேராசிரியர் ஆவார். வயோதிகம் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனது 2 கால் மூட்டுகளுக்கும் அறுவை சிகிச்சை நடந்து 20 ஆண்டுகள் முடிந்துள்ளது. ஆயினும் எனது கல்வி பணியை நிறுத்தவில்லை. இறக்கும் வரை கல்வியை யாருக்காவது கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை விட்டாலும், ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க நான் சென்றுவிடுவேன். அவர்கள்தான் என் பிள்ளைகள். தினமும் அதிகாலை 4 மணிக்கு கண் விழிப்பேன்.

விசாகப்பட்டினத் தில் இருந்து விஜயநகரத்திற்கு காரில் செல்வேன். அங்கு மாணவர்களுக்கு கல்வி கற்பித்து விட்டு மாலை வீடு திரும்புவேன். இதற்காக பல்கலைக்கழகம் சார்பில் எனக்கு கார் வழங்கப்பட்டுள்ளது. போக வர 140 கி.மீ தூரம் உள்ளது. இப்போதுள்ள செஞ்சூரியன் பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜு என் மாணவர். உலகிலேயே மிக வயதான பேராசிரியர் நான்தான். என் கடைசி மூச்சு உள்ளவரை மாணவர்களுக்கு என் கல்வியை போதித்துக்கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே தனது கணவரின் ஆசைப்படி தான் வாழ்ந்து வந்த சொந்த வீட்டை விசாகப்பட்டினத்திலுள்ள விவேகானந்தா மெடிக்கல் டிரஸ்ட் என்ற அறக்கட்டளைக்குத் தானமாக வழங்கியுள்ளார் சாந்தம்மாள். மேலும், சொந்த வீட்டை அறக்கட்டளைக்கு வழங்கிவிட்டு தற்போது வாடகை வீட்டில் இருந்தவாறு கல்விப்பணியைச் செய்து வருகிறார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x