Last Updated : 10 Oct, 2022 07:38 AM

 

Published : 10 Oct 2022 07:38 AM
Last Updated : 10 Oct 2022 07:38 AM

அமேதியை அடுத்து ரேபரேலிக்கு பாஜக குறி: தோல்வியுற்ற 144 தொகுதிகளில் வெற்றி பெற வியூகம்

(கோப்புப்படம்).

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றிருந்தார். இங்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை பாஜக இரண்டாவது முறையாக போட்டியிட வைத்து வெற்றி பெற்றது.

இதன் அருகிலுள்ள ரேபரேலி தொகுதியை காங்கிரஸ் இடைக் கால தலைவர் சோனியா தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வரும் நிலையில் அந்தத் தொகுதியையும் காங்கிரஸிடமிருந்து பறிக்க பாஜக திட்டமிடுகிறது.

இதுபோல் உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங்கின் மெயின்புரி, இவரது சொந்த கிராமம் அமைந்துள்ள எட்டவா உட்பட 15 தொகுதிகளை பாஜக குறிவைத்துள்ளது.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேயின் பாராமதி, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் ஜாதவ்பூர், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் சிந்த வாடா உள்ளிட்டவையும் பாஜவின் பட்டியலில் உள்ளன.

பாஜகவின் பட்டியலில் உள்ள 144 தொகுதிகளும் கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் பாஜகவால் வெல்ல முடியாதவை ஆகும். இவற்றில் தனிக்கவனம் செலுத்தி, வரும் தேர்தலில் தீவிரப் பிரச்சாரம் செய்யவும் பாஜக முடிவு செய்துள்ளது.

இதற்கான புதிய வியூகத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் அமைத்துள்ளனர். இதற்கு ‘மக்களவை சிறப்பு தொகுதிகள் 144’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் வசமுள்ள இந்த தொகுதிகளில் அதிகபட்சமாக வெல்வது என்பது பாஜகவின் புதிய வியூகமாகி விட்டது.

மத்திய அமைச்சர்கள் 40 பேர் இத்தொகுதிகளின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தலா 2 முதல் 3 மக்களவைத் தொகுதிகள் வரை ஒதுக்கப்பட உள்ளன. இத்தொகுதிகளுக்கு தங்கள் அமைச்சகங்கள் மூலம் செய்ய வேண்டிய திட்டங்களை இந்த40 பொறுப்பாளர்களும் செய்துமுடிக்கவும் பாஜக உத்தரவிட்டுள்ளது.

பாஜகவின் மூன்று கட்ட பொறுப்பாளர்களும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே சுமார்18 மாதங்களுக்கு அந்த தொகுதிகளில் முகாமிட்டு பிரச்சாரம் செய்யஉள்ளனர். இந்த 144 தொகுதிகள் பட்டியலில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் வெல்வது பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்கும். எனினும் வரும் தேர்தலில் இத்தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த பாஜகவின் முக்கியத் தலைவர்கள் முடிவுசெய்துள்ளனர். 144 தொகுதிகளுக்கும் பொருத்தமான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியையும் பாஜக தொடங்கிவிட்டது.

144 தொகுதிகளுக்கு தங்கள் அமைச்சகங்கள் மூலம் செய்ய வேண்டிய திட்டங்களை 40 பொறுப்பாளர்களும் செய்து முடிக்க பாஜக உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x