Last Updated : 29 Sep, 2022 05:12 AM

 

Published : 29 Sep 2022 05:12 AM
Last Updated : 29 Sep 2022 05:12 AM

ஈரோடு பேராசிரியர் மணியின் ‘இன்டர்நேஷனல் எக்னாமிக்ஸ்’ - பொருளாதார மாணவர்களுக்கு புதிய பாடநூல் வெளியீடு

பேராசிரியர் என்.மணியின் ‘இன்டர்நேஷனல் எக்னாமிக்ஸ்’ நூலை ஐசிஎஸ்எஸ்ஆர் உறுப்பினர் செயலாளர் வி.கே.மல்ஹோத்ரா (வலமிருந்து மூன்றாவது) டெல்லியில் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

புதுடெல்லி: ஈரோடு கல்லூரிப் பேராசிரியர் என்.மணியின் ‘இன்டர்நேஷனல் எக்னாமிக்ஸ்’ நூல் டெல்லியில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதை இந்திய சமூக அறிவியல் ஆய்வு கவுன்சில் (ஐசிஎஸ்எஸ்ஆர்) உறுப்பினர் செயலாளர் வி.கே.மல்ஹோத்ரா வெளியிட்டார்.

புதிய கல்வித் திட்டத்தின்படி, பொருளாதாரம் படிக்கும் இளநிலைமற்றும் முதுநிலை மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ‘இன்டர்நேஷனல் எக்னாமிக்ஸ்’ எனும் புதிய பாடநூலை ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் என்.மணி எழுதியுள்ளார். சர்வதேச பொருளாதாரம் தொடர்பாக ஆங்கிலத்தில் என்.மணி எழுதியுள்ள மூன்றாவது நூல் இதுவாகும்.

இதனை இந்திய பொருளாதார சங்கத்தின் (ஐஈஏ) தலைவரும் ஐசிஎஸ்எஸ்ஆர் அமைப்பின் உறுப்பினர் செயலாளருமான வி.கே.மல்ஹோத்ரா வெளியிட்டார்.

இதற்கான நிகழ்ச்சி டெல்லியில் மத்திய கல்வி அமைச்சகத்தின் முக்கிய அமைப்பான ஐசிஎஸ்எஸ்ஆர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

பேராசிரியர் வி.கே.மல்ஹோத்ரா தனது உரையில், “தனது ஆய்வுகள் மீதான கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதுபவர்களால் மட்டுமே பாடநூல்களை எழுத முடியும். பேராசிரியர் மணியின் புதிய பாடநூலில் அவரது ஆழமான ஆய்வு வெளிப்படுகிறது. முதன்முறையாக சர்வதேச அளவிலான சமகாலப் பொருளாதாரம், பெரு நிறுவனங்களின் சமூக நிதி மற்றும் அவர்களது தொழிலாளர் நலன் குறித்தும் இந்நூல் பேசுகிறது” என்றார்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் வெளியீடான இந்த நூல் பற்றி இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தின் பேராசிரியர் முரளி கல்லுமால் பேசும்போது, “புதிய கல்விக் கொள்கையில் மாணவர்கள் தங்கள் விருப்பப் பாடத்தை தேர்வு செய்யும் ‘சிபிசிஎஸ்’ எனும் முறை உள்ளது. இந்த சிபிசிஎஸ் அடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மத்திய அரசின் குடிமைப்பணி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் இந்த நூல் பயன்படும்” எனப் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் முதல் நூலை ஐஈஏ கவுரவ பொதுச் செயலாளர் டி.கே.மதன் பெற்றுக்கொண்டார். பேராசிரியர் மணியின் நூலை, ஐசிஎஸ்எஸ்ஆர் முன்னாள் தலைவர் பி.கனகசபாபதி, கொச்சின் அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் பி.அருணாச்சலம், என்சிஇஆர்டி பேராசிரியர் வி.நிவாசன், இந்திய ஆரோக்கியப் பொருளாதாரம் மற்றும் கொள் கைகளுக்கான சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் வி.செல்வராஜு, உச்ச நீதிமன்றத் துக்கான ஹரியாணா அரசின் முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.என்.சுப்பிரமணியம் ஆகியோர் பாராட்டிப் பேசினர்.

இணையதளம் வழியாகவும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழகம் உட்பட பல மாநில பொருளாதாரப் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x