Published : 27 Sep 2022 05:28 AM
Last Updated : 27 Sep 2022 05:28 AM

ஹவாலா பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு அபுதாபி ஓட்டலை பயன்படுத்திய பிஎஃப்ஐ - அமலாக்கத் துறை தகவல்

புதுடெல்லி: ஹவாலா நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரிலுள்ள ஒரு ஓட்டலை பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) பயன்படுத்தியது என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிஎஃப்ஐ, சட்டவிரோத காரியங்களில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி நாடு முழுவதும் உள்ள அதன் கிளை அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

கேரளாவில் கோழிக்கோட்டில் உள்ள பிஎஃப்ஐ அமைப்பின் தலைவர் முகமது சபீக் பயத் கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட 11 பேரிடம் 30-ம் தேதிவரை விசாரணை நடத்த என்ஐஏ-வுக்கு கொச்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக, உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அளித்த விசாரணை அறிக்கையில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளதாவது:

சட்டவிரோத செயல்பாடுகளுக்கு நிதி திரட்டி பிஎஃப்ஐ ரூ.120 கோடி வரை வங்கிகளில் டெபாசிட்டாக வைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரிலுள்ள தர்பார் ரெஸ்டாரன்ட் என்ற பெயரிலான ஓட்டலை ஹவாலா பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு பிஎஃப்ஐ பயன்படுத்தியுள்ளது. ஹவாலா மூலம் இந்தியாவில் உள்ள பிஎஃப்ஐ அமைப்புக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைதாகியுள்ள அப்துல் ரசாக்கின் சகோதரர்தான் அபுதாபியிலுள்ள தர்பார் ரெஸ்டாரன்டின் நிர்வாக இயக்குநர் ஆவார். மேலும் அப்துல் ரசாக்குக்கு சொந்தமான தமார் இந்தியா ஸ்பைஸஸ் பிரைவேட் லிமிடெட்என்ற நிறுவனம், இதுபோன்ற சட்டவிரோதப் பணப் பரிமாற்றம், குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.

அதேபோல, ஷஃபீக் பயத் என்பவர் 2018 வரை கல்ஃப் தேஜஸ் என்ற தினசரியில் 2 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இந்த நாளிதழ், இண்டர் மீடியா பப்ளிஷிங் லிமிடெட் நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்ட தேஜஸ் செய்தித்தாளின் ஒரு அங்கமாகும். இதன் நிர்வாகத் தலைவர்களில் ஒருவராக அப்துல் ரசாக் அப்போது இருந்தார்.

கடந்த 2007-ம் ஆண்டு பிஎஃப்ஐ அமைப்பை தொடங்கியவர்களில் ஒருவரான ஷபீக் பயத், கத்தாரில் நிதி திரட்டும் பொறுப்பினை ஏற்றிருந்தார். இவருக்கு அபுதாபியில் இருந்த தொடர்பினை பயன்படுத்திக் கொண்ட அப்துல் ரசாக் தர்பார் உணவகத்தினை பணப்பரிவர்த்தனை மையமாக மாற்றிக் கொண்டார்.

வளைகுடா நாடுகளில் நடந்த இந்த நிதி திரட்டுதல் மற்றும் ஹவாலா நடவடிக்கைகளில் முக்கியமாக பங்காற்றியவர் அஷ்ரஃப். இவர் பிஎஃப்ஐ-ன் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், எர்ணாகுளம் பிஎஃப்ஐ தலைவராகவும் இருந்தார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு பேராசிரியர் ஜோசப்பின் கையை வெட்டிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

பிஎஃப்ஐ-ன் நிதிப் பரிமாற்றங்கள் தொடர்புடைய இவர் பிஎஃப்ஐ அமைப்பிற்கு நிதிப் பரிமாற்ற மையமாக விளங்கிய தர்பார் உணவகத்தின் உரிமையாளராவார். இவ்வாறு அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 6 பேரை உ.பி. போலீஸார் மீரட் மற்றும் வாரணாசியில் கைது செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x