Published : 26 Sep 2022 05:26 AM
Last Updated : 26 Sep 2022 05:26 AM

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சோனியாவுடன் நிதிஷ், லாலு சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதிஷ் குமார், லாலு பிரசாத். படம்: பிடிஐ

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டுகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர்.

பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்தார். அணி மாறிய பிறகு, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அண்மையில் டெல்லி சென்ற அவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து, இந்திய தேசியலோக் தளம் சார்பில் ஹரியாணாவின் ஃபதேபாத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் நிதிஷ் பங்கேற்றார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்தப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு 10 மாநிலங்களைச் சேர்ந்த, 17 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவருமான நிதிஷ் குமார், பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு டெல்லி சென்ற நிதிஷ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அவர்களுடன், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தும் இணைந்து கொண்டார்.

2024-ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து மூவரும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் லாலு பிரசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, “காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் நானும், நிதிஷும் சில பரிந்துரைகளைத் தெரிவித்தோம். ‘காங்கிரஸ் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்ட பிறகு, அவரைச் சந்தித்து தேர்தல் வியூகங்களை வகுக்கலாம்’ என்று சோனியா பதில் அளித்தார். என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிக் கூட்டணியை அமைக்க முடியாது. பாஜகவுக்கு எதிராகப் போரிடவும் முடியாது” என்றார்.

எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும்

முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஹரியாணாவின் ஃபதேபாத்தில் நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிதிஷ் குமார் பேசும்போது,“நான் இளைஞராக இருந்தபோது,தேவிலால் என்னை வழிநடத்தியதையும், ஊக்குவித்ததையும் மறக்க முடியாது.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வால் வெற்றிபெற முடியாது. நம்முடன் இணையும்படி சரத்பவார் மற்றும் காங்கிரஸ் கட்சியைக் கேட்டுக் கொண்டுள்ளேன். நான் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் ஆசியைப் பெற விரும்பகிறேன். அவர் இன்னும் பல எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

ஹரியாணா அரசியலில் இந்திய தேசிய லோக் தள கட்சி மறுமலர்ச்சி அடையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற இந்தக் கட்சி தனது ஆதரவைஅளித்தது. தேவிலால் 33 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி போட் கிளப் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அந்தக் கூட்டத்துக்கு இணையாக, தற்போது நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை இந்திய தேசிய லோக் தள தலைவர்கள் ஒப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x