Last Updated : 29 Nov, 2016 03:21 PM

 

Published : 29 Nov 2016 03:21 PM
Last Updated : 29 Nov 2016 03:21 PM

செய்யாத தவறுக்கு தண்டனை: பெங்களூரு பள்ளிக்கு பாடம் புகட்டிய சிறுவன்

செய்யாத குற்றத்துக்காக தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் அளித்து தகுந்த பாடம் புகட்டியிருக்கிறார் பெங்களூரு சிறுவன் ஒருவர்.

பெங்களூருவின் தனியார் பள்ளியொன்றில் படிக்கும் 13 வயது சிறுவனை, பள்ளிக்கு நோட்டுப் புத்தகத்தை எடுத்து வரவில்லை என்றுகூறி, வீட்டுக்குச்சென்று அதை எடுத்துவருமாறு ஆசிரியர் வற்புறுத்தியிருக்கிறார்.

இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. ஆசிரியர் உத்தரவை ஏற்று சிறுவனும் 5 கி.மீ. தொலைவில் இருக்கும் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

இந்நிலையில், மாணவனை வீட்டுக்குச் சென்று புத்தகத்தை எடுத்துவர வற்புறுத்திய பள்ளி நிர்வாகத்துக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தையின் குற்றச்சாட்டு:

இச்சம்பவத்தைக் கடுமையாக எதிர்த்துள்ள சிறுவனின் தந்தை ஷங்கர் ஷிண்டே, கர்நாடக மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம், சந்தீபனி நிகேதன் ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஷிண்டே 'தி இந்து' (ஆங்கிலம்)விடம் பேசும்போது, ''என் மகனுக்கு கடந்த மாதம் தான் அறுவைசிகிச்சை செய்திருந்தோம். அவன் அதிலிருந்து முழுமையாக மீளவில்லை. எங்கள் குடும்பத்தினரில் யாராவது ஒருவர்தான் தினமும் அவனை பள்ளிக்குக் கொண்டுவந்து விடுவோம்.

பள்ளி ஆசிரியர் வீட்டில் நோட்டுப்புத்தகம் இருப்பதாகக் கூறியபோது, எப்படி அது பள்ளியிலேயே இருந்திருக்கமுடியும். என்னுடைய மகன் இதைச் சொல்ல தொடர்ந்து முயற்சித்திருக்கிறான். ஆனால் அவர் அதைக் கேட்கக் கூட மறுத்துள்ளார்.

என் மகனைப் போலவே இன்னும் சில குழந்தைகளும் இதே மாதிரியான சம்பவங்களின்போது வீட்டுக்குத் திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர். நான் பள்ளி முதவரிடம் பேசியபோது அவருக்கு எங்கள் வீடு இவ்வளவு தூரமாக இருக்கும் என்று தெரியவில்லை என்றார். எப்படி ஒரு பள்ளி, புத்தகத்துக்காக குழந்தையைத் தனியாக வீட்டுக்கு அனுப்ப முடியும்?

இதுகுறித்துப் புகார் அளிக்க முடிவு செய்தபோது வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் அச்சம் கொண்டனர். பள்ளி நிர்வாகம் ஏதாவது செய்துவிடுமோ என்று கவலைப்பட்டனர். ஆனால் நான் இந்த நிலை மற்ற குழந்தைகளுக்கு ஏற்படக்கூடாது என்று எண்ணினேன்'' என்றார்.

பள்ளிக்கு சம்மன்:

புகார் குறித்துப் பேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளி நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்புவதாகவும், நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஆணைய உறுப்பினர் மரியசாமி, ''இச்செயல் கர்நாடக மாநில குழந்தை பாதுகாப்புக் கொள்கைக்கு எதிரானது. ஆசிரியரைத் தாண்டி, பள்ளியின் மற்ற அதிகாரிகளையும் விசாரிக்க உள்ளோம். எப்படி ஒரு சிறுவனைத் தனியாக வீட்டுக்கு அனுப்ப முடியும் என்ற ரீதியில் விசாரணை நடைபெறும்'' என்று தெரிவித்தார்.

ஆர்.டி.இ. சட்டத்தை மீறுகிறதா?

குழந்தை உரிமைகள் நல ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர் அந்த மாணவனை நடத்திய விதம் தவறானது எனக் கூறுகின்றனர். மேலும், ஆசிரியரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.இ.) 17 வது பிரிவு,எந்தக் குழந்தைக்கும் உடல்ரீதியான தண்டனையோ அல்லது மனரீதியான துன்புறுத்தலையோ அனுபவிக்கக் கூடாது எனக் கூறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x