Published : 15 Sep 2022 04:25 PM
Last Updated : 15 Sep 2022 04:25 PM

பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து: நிதிஷ் குமார் வாக்குறுதி

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் | கோப்புப் படம்

பாட்னா: “பாஜக அல்லாத கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்” என்று ஐக்கிய ஜனதா தள தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பிஹாரில் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார், மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார்.

இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த நிதிஷ் குமார், “மத்தியில் அடுத்த ஆட்சியை அமைப்பதற்கான வாய்ப்பு பாஜக அல்லாத கூட்டணிக்கு கிடைக்குமானால், பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததற்கு காரணம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

சிறப்பு அந்தஸ்து - பின்னணி: புவியியல் ரீதியாகவும், சமூக - பொருளாதார ரீதியாகவும் முன்னேறுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ள மாநிலங்களின் மேம்பாட்டிற்காக சிறப்பு அந்தஸ்து வழங்கும் முறை 1969-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம், இந்த மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் வரி வருவாய், வளர்ச்சித் திட்டங்கள், அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை பெற்று வருகின்றன.

சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள மாநிலங்கள்: முதலில் அசாம், நாகாலாந்து, ஜம்மு காஷ்மீர் ஆகிய 3 மாநிலங்களுக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. 1974 - 1979 காலகட்டத்தில் இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுா ஆகிய 5 மாநிலங்கள் இதில் சேர்க்கப்பட்டன. இதனையடுத்து 1990-ல் அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகிய இரு மாநிலங்கள் சேர்க்கப்பட்டன. 2001-ல் உத்தராகண்ட்டிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன்மூலம், நாட்டில் தற்போது 11 மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளன.

சிறப்பு அந்தஸ்து கோரும் மாநிலங்கள்: ஆந்திரப் பிரதேசம், பிஹார், ஒடிசா, ராஜஸ்தான், கோவா உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்தை கோரி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x