Published : 15 Sep 2022 11:59 AM
Last Updated : 15 Sep 2022 11:59 AM

உ.பி. | பட்டியலின சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை; 6 பேர் கைது

லக்கிம்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு மைனர் சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

லக்கிம்பூர் மாவட்டம் நிகாசன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் புதன்கிழமை மாலை 17, 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவம் உத்தப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக, சுஹைல், ஜூனைத், ஹபிசுல், ரஹ்மான், கரிமுதீன், ஆரிஃப் மற்றும் சோட்டு ஆகிய ஆறு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து கூடுதல் எஸ்.பி. அருண் சிங் கூறுகையில், "குற்றவாளிகள் மீது கொலை, காயப்படுத்துதல், வீட்டில் அத்துமீறி நுழைதல், வன்புணர்வு ஆகிய பிரிவுகள் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் தாயார் சொன்ன தகவலின் அடிப்பைடயில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

சிறுமியின் தாயார், சிறுமிகள் இருவரும் மாட்டிற்கு தீவனம் வெட்டிக் கொண்டிருந்த போது, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் வந்து தனது மகள்களை கடத்திச் சென்றதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமிகளின் தாயார் மற்றும் கிராமாவாசிகள் அவர்கள் கிராமத்தில் இருந்து சில கிமீ தொலைவில் உள்ள நிதாசன் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "லக்கிம்பூரில் இரண்டு சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது மனதை உலுக்குகிறது. அந்தச் சிறுமிகள் பட்டடப்பகலில் கடத்தப்பட்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நாளிதழ்கள் தொலைக்காட்சிகளில் பொய்யான விளம்பரங்களைக் கொடுப்பதால் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தி விட முடியாது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகின்றன" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், "ஹாத்ராஸ் கொடூரத்தின் மறுநிகழ்வு" என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், நிகாசன் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு தலித் சிறுமிகள் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்கள், பஞ்சநாமா, குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சிறுமிகளின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். லக்கிம்பூரில் விவசாயிகளுக்கு பிறகு தலித்துகள் தற்போது கொல்லப்பட்டிருப்பது, "ஹாத்ராஸ் கி பேட்டி" கொடூரத்தின் மறுநிகழ்வு" என்று தெரிவித்துள்ளார்.

இந்தசம்பவம் குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங், "இந்தச் சம்பவம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பேட்டி பச்சாவோ(மகள்களை காப்பாற்றுங்கள்) என்பதை அம்பலப்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x