Published : 13 Sep 2022 01:19 PM
Last Updated : 13 Sep 2022 01:19 PM

கோகினூர் வைரத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் - குடியரசுத் தலைவருக்கு மனு

இங்கிலாந்து மகாராணி கிரீடத்தில் உள்ள கோகினூர் வைரம்| கோப்புப்படம்

புவனேஷ்வர்: உலக புகழ்பெற்ற கோகினூர் வைரம் பூரி ஜெகநாதருக்கு சொந்தமானது என்றும், இங்கிலாந்தில் இருந்து அதனை இந்தியாவிற்கு திரும்பக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலாச்சார அமைப்பு ஒன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பூரியைச் சேர்ந்த ஸ்ரீ ஜெகந்நாத் சேனா என்கிற அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷன் பட்நாயக், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

புகழ்பெற்ற கோகினூர் வைரம் ஸ்ரீ ஜெகந்நாதருக்குச் சொந்தமானது. தற்போது அது இங்கிலாந்து ராணியிடம் உள்ளது. மகாராஜா ரஞ்சித் சிங், பகவான் ஜெகந்நாதருக்கு அதை வழங்கினார். கோகினூர் வைரத்தை இந்தியாவிற்கு திரும்பக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமருக்கு அறிவுறுத்துங்கள்.

பஞ்சாப்பை சேர்ந்த மகாராஜா ரஞ்சித் சிங், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நாதிர் ஷாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற்றதற்காக கோகினூர் வைரத்தை பூரி ஆலையத்திற்கு தானமாக வழங்கினார்.

இதுகுறித்து இங்கிலாந்து ராணிக்கு நான் கடிதம் எழுதினேன். ராணியிடமிருந்து கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி எனக்கு பதில் கடிதம் வந்தது. அதில், இந்தவிவகாரம் குறித்து நேரடியாக இங்கிலாந்து அரசாங்கத்திடம் முறையிடுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவுடன் இங்கிலாந்து ராணி அனுப்பிய பதில் கடிதத்தின் நகலும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை அடுத்து இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரியா தர்ஷன் பட்நாயக்கிடம் கேட்டபோது, "இங்கிலாந்து செல்வதற்கான விசா மறுக்கப்பட்டதால் என்னால் இங்கிலாந்து அரசாங்கத்திடம் பேச முடியவில்லை" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் அணில் தீர் செய்திநிறுவனம் ஒன்றிடம் கூறுகையில், "கோகினூர் வைரம் உடனடியாக ஒப்படைக்கப்படவில்லை. கடந்த 1839-ம் ஆண்டு ரஞ்சித் சிங் இறந்த பின்னர் பத்து ஆண்டுகள் கழித்து அவரது மகன் துலீப் சிங்கிடமிருந்து பிரிட்டிஷார் கோகினூர் வைரத்தை எடுத்துக் கொண்டனர். அப்போது அந்த வைரம் பூரி ஜெகநாதருக்கு வழங்கப்பட்டது என்று அறிந்திருந்தனர். மகாராஜா ரஞ்சித் சிங், தான் இறப்பதற்கு முன், கோகினூர் வைரத்தை பூரி ஜெகநாதர் கோயிலுக்கு தானமாக கொடுப்பதாக உயில் எழுதி வைத்தார். அந்த உயில், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஒருவரால் சான்றளிக்கப்பட்டது. அதற்கான ஆதாரம் தற்போதும் டெல்லியில் உள்ள தேசிய ஆவணக்காப்பகத்தில் உள்ளது" என்று தெரிவித்தார்.

கோகினூர் வைரம், 170 ஆண்டுகளுக்கு முன்னர் லாகூர் மகாராஜாவால் அப்போதைய இங்கிலாந்து ராணியிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும், அது கையளிக்கப்படவில்லை என்றும் இந்திய தொல்லியல் துறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்டிஐ கேள்விக்கு அளித்த பதிலில் தெரிவித்திருந்தது.

கோகினூர் வைரம் பற்றி மற்றொரு வரலாற்று ஆசிரியரான வில்லியம் டார்லிம்பிள் என்பவர் தனது "கோகினூர்" என்ற புத்தகத்தில் சீக்கிய வாரிசான துலீப் சிங், கோகினூர் வைரத்தை விக்டோரியா ராணிக்கு கொடுக்கும் போது மிகவும் வருந்தினார் என்றும், ஆனாலும் ஒரு மனிதராக அதனை ராணிக்கு கொடுக்க விரும்பினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில், இந்திய அரசாங்கம் கோகினூர் வைரம் பற்றி உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிடும் போது, தற்போது சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கோகினூர் வைரம், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால், கடத்தப்படவோ, வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்படவோ இல்லை. அது பஞ்சாப் அரசரால் கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டது என்று தெரிவித்திருந்தது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திடம் இருந்த 105 காரட் கொண்ட கோகினூர் வைரம், அவர் இறந்தைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் மன்னராக முடி சூட்டிக் கொண்டதால் அவரது மனைவியான ராணி கமிலாவுக்கு இனி செல்லும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x