Published : 10 Sep 2022 03:52 PM
Last Updated : 10 Sep 2022 03:52 PM

தொலைந்துபோனது மதமும் தான்! - 75 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த உறவுகளின் நெகிழ்ச்சிக் கதை

ஜலந்தர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த சீக்கியர் அமர்ஜித் சிங். இவர் 75 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்த தனது தங்கை குல்சூம் அக்தரை சந்தித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது அமர்ஜித்தும், அவரது சகோதரியும் மட்டும் இந்தியாவில் தொலைந்துவிட்டனர். அவரது முஸ்லிம் பெற்றோர் பாகிஸ்தான் சென்றுவிட்டனர். இது குறித்து குல்சூம் பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "1947-ல் ஜலந்தரில் உள்ள புறநகர்ப் பகுதிக்கு எனது அப்பாவும் அம்மாவும் பெயர்ந்துவிட்டனர். எனது அண்ணனும் அக்காவும் மட்டும் இந்தியாவிலேயே தொலைந்துவிட்டனர் என்பது எனக்குத் தெரியவந்தது. அம்மா அவ்வப்போது அவர்களை நினைத்து அழுவார். அப்போதெல்லாம் மீண்டும் நான் எனது சகோதரி, சகோதரரை சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை.

இருப்பினும் சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது தந்தையின் நண்பர் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வந்தார். அப்போது அம்மா, அவரிடம் தனது தொலைந்துபோன குழந்தைகள், அவர்கள் எந்த கிராமத்தில் இருந்தனர் போன்ற தகவல்களைக் கூறினார். அப்பாவின் நண்பர் சர்தார் தாரா சிங் ஊருக்கு திரும்பச் சென்றவுடன் பட்வான் கிராமத்தில் அம்மா சொல்லிய அடையாளத்தில் உள்ளவர்களைத் தேடினார். அப்போது அதிர்ஷ்டவசமாக இருவரும் கிடைத்தனர்.

எனது சகோதரரை (அமர்ஜித்) 1947-ல் ஒரு சீக்கிய குடும்பம் தத்தெடுத்துக் கொண்டது. அவருக்கு அமர்ஜித் சிங் என்று பெயர் சூட்டியுள்ளது. அதன் பின்னர் நான், எனது சகோதரருடன் வாட்ஸ்அப்பில் பேசினேன். கடுமையான முதுகு தண்டுவட வலியையும் தாண்டி நான் சகோதரரை சந்திக கர்டாபூருக்கு வந்தேன். இந்தச் சந்திப்பு உணர்வுபூர்வமாக அமைந்தது" என்றார்.

அமர்ஜித்துக்கு தனது உண்மையான பெற்றோர் முஸ்லிம்கள்; அவர்கள் பாகிஸ்தானில் இருக்கிறார்கள் என்பதை ஆரம்பத்தில் நம்பக் கடினமாகவே இருந்தது. பின்னர் அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நம்பினார். அமர்ஜித்துக்கு மூன்று சகோதரர்கள் இருக்கின்றனர். இப்போது சகோதரி குல்சூமை அவர் நேரில் சந்தித்துள்ளார். ஒரு சகோதரர் ஜெர்மனியில் இறந்துவிட்டார். மற்றவர்களை சந்திக்க ஆர்வமாக இருப்பதாக அமர்ஜித் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x