Last Updated : 30 Aug, 2022 04:17 PM

28  

Published : 30 Aug 2022 04:17 PM
Last Updated : 30 Aug 2022 04:17 PM

‘ஒரு பேரியக்கத்தில் விளைந்த கட்சிக்கு இது அழகா?’ - கேஜ்ரிவாலுக்கு ஹசாரே எழுதிய கடிதமும் பின்புலமும்

அன்னா ஹசாரே உடன் அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப் படம்

புதுடெல்லி: 'உங்கள் வார்த்தைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லையே...' - இப்படித்தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை மூத்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே விமர்சித்துள்ளார். டெல்லி அரசியலில் அன்றாடம் சிபிஐ ரெய்டு, விசாரணைகள், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நம்பிக்கை வாக்கெடுப்பு என்று பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்போது கேஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார் அன்னா ஹசாரே.

அன்னா ஹசாரே கடித விவரம்: “நீங்கள் முதல்வரான பின்னர் நான் உங்களுக்கு முதன்முறையாகக் கடிதம் எழுதுகிறேன். அதற்குக் காரணம் அண்மையில் வெளியான டெல்லி மதுபானக் கொள்கை பற்றிய செய்திகள். நீங்கள் உங்களது ஸ்வராஜ் என்ற புத்தகத்தில் மதுபானக் கொள்கை பற்றி சில மகத்தான பரிந்துரைகளை சொல்லியிருந்தீர்கள். அந்த புத்தகத்திற்கு நான் முன்னுரை எழுதிக் கொடுத்தேன். நீங்கள் அதில், மக்களின் சம்மதம் இல்லாமல் அந்தப் பகுதியில் மதுபானக் கடைகளே திறக்கக் கூடாது எனக் கூறியிருந்தீர்கள். ஆனால், முதல்வரான பிறகு அதை எல்லாவற்றையும் மறந்துவிட்டீர்கள் போல்!

டெல்லி அரசிடமிருந்து நான் இப்படி ஒரு கொள்கையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் முதல்வரான பிறகு லோக்பால், லோக் ஆயுக்தாவை முழுவதுமாக மறந்துவிட்டீர்கள். சட்டப்பேரவையில் ஒருமுறை கூட லோக் ஆயுக்தாவைக் கொண்டுவர நீங்கள் முயற்சிக்கவில்லை. இப்போது உங்கள் அரசாங்கம் மக்களின் வாழ்வை, பெண்களை பாதிக்கும் ஒரு கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. இது ஒன்றே போதும் உங்கள் வார்த்தைகளும் செயல்பாடும் வெவ்வேறு என்பதைக் காட்ட.

மகாராஷ்டிராவில் மதுபானக் கொள்கைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக மது விற்பனைக்கு எதிராக கிராமப்புற பெண்கள் குரல் கொடுக்கும் அதிகாரம் கிடைத்தது. ஆனால், இன்று டெல்லி அரசு மதுபானக் கொள்கையை அமல்படுத்த முயன்று அதன் நிமித்தமான ஊழலில் சிக்கியுள்ளது. டெல்லியில் மூலைமுடுக்கெல்லாம் மதுபானக் கடைகள் வந்துவிட்டன. ஒரு பேரியக்கத்தில் விளைந்த கட்சிக்கு இது அழகா? நீங்கள் அதிகார போதையில் இருக்கிறீர்கள்” என்று அன்னா ஹசாரே அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அன்னா ஹசாரேவும் ஆம் ஆத்மியும்: கடந்த 2011ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற இயக்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அன்னா ஹசாரே தலைமையில் நடந்த இந்தப் போராட்டம் பிரம்மாண்ட போராட்டமாக உருவெடுத்து உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது. அன்னா ஹசாரே ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அந்த மேடையில்தான் மக்களுக்கு அரவிந்த கேஜ்ரிவால் அறிமுகமானார். அன்னா ஹசாரேவின் தொப்பி அடையாளம் பெற்றது. அந்தத் தொப்பியில் ஆம் ஆத்மி என்று எழுதி விளக்குமாற்றை கட்சியின் சின்னமாக்கி டெல்லி தேர்தலில் களம் கண்ட கேஜ்ரிவால் மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்றார். 2012ல் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தது. இப்போது 2வது முறையாக டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது.

தீவிர அரசியலில் ஈடுபட மறுத்த அன்னா ஹசாரே கட்சிக்கும் கேஜ்ரிவாலுக்கும் தனது ஆதரவை வெளியில் இருந்து அளித்தார். ஆனால், ஆம் ஆத்மி ஆட்சி அமைந்த பின்னர் அதனை பலமுறை விமர்சனங்களுக்கு உள்ளாக்கினர். இதனால், கேஜ்ரிவால் அன்னா ஹசாரேவைப் பற்றி பேசுவதைக் கூட தவிர்க்கலானார். இந்நிலையில்தான் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கொள்கை: தலைநகர் டெல்லியும், முதல்வர் கேஜ்ரிவாலும் அவரது சகாக்களும் சமீப காலமாகவே ஊடகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றனர். காரணம் டெல்லி மதுபானக் கொள்கை. டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, புதிய மதுபானக் கொள்கையை கடந்த ஆண்டு நவ.16-ல் அறிமுகப்படுத்தியது. அதன்படி, மதுபான மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. டெல்லி முழுவதும் 849 விற்பனை நிலையங்களில் சில்லறை விற்பனை மேற்கொள்ள தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது. மதுபானங்களை வீட்டுக்கே சென்று விநியோகம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய மதுபானக் கொள்கை, கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதனிடையே, டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை குறித்து சர்ச்சை எழுந்தது. இதனால், அதை திரும்பப் பெறுவதாக டெல்லி அரசு அறிவித்தது. மேலும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அரசு கடைகளின் மூலமே மது விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஆம் ஆத்மி அரசு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்தார்.

இதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 19-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்த்துவிட்டு பாஜக ஆட்சியைக் கைப்பற்ற மறைமுகமாக முயல்கிறது என்று கூறிவருகிறார் அரவிந்த் கேஜ்ரிவால்.

நியூயார்க் டைம்ஸ் செய்தியும் ரெய்டும்: டெல்லி அரசியல் சர்ச்சை ஆரம்பித்தது அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் செய்தித் தாளில் டெல்லியில் கல்வி மற்றும் மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்தும் அதற்குப் பின்னணியில் இருந்த மணிஷ் சிசோடியா குறித்தும் முதல் பக்கத்தில் முழுநீள கட்டுரை வெளியானதற்கு அடுத்த நாள். ஆகையால் டெல்லியில் ஆம் ஆத்மியின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமலேயே பாஜக சிபிஐ அமைப்பை ஏவிவிடுகிறது. 2024 தேர்தலில் பாஜகவுக்கு ஆம் ஆத்மியே நேரடி போட்டி என்று மணிஷ் சிசோடியா கூறினார். அன்று ஆரம்பித்த சர்ச்சை இன்று பல்வேறு ரூபங்கள் எடுத்து வளர்ந்து நிற்கின்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x