Published : 30 Aug 2022 09:13 AM
Last Updated : 30 Aug 2022 09:13 AM

இந்தியாவில் 2021ல் நடந்த சாலை விபத்துகளில் 1.73 லட்சம் பேர் பலி: உயிரிழப்பில் தமிழகம் 2வது இடம்

சாலை விபத்து | பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி: நாட்டிலேயே அதிகமான சாலை விபத்து உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) 2021 அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி நாட்டில் 2021ல் நடந்த 4.22 லட்சம் சாலை விபத்துகளில் 1.73 லட்ச உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 24,711 பேர் இறந்துள்ளனர். அடுத்தபடியாக தமிழகத்தில் 16,685 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2020ல் 3,68,828 ஆக இருந்த சாலை விபத்துகள் 2021ல் 4,22,659 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ல் மொத்தம் நடந்த 4,22,659 விபத்துகளில் 4,03,116 விபத்துகள் சாலையிலும், 17,933 ரயில் விபத்துகளாகவும், 1,550 விபத்துகள் ரயில் தண்டவாளம் கடக்கும் போதும் நடந்துள்ளன. இவற்றில் முறையே சாலையில் 1,55,622 உயிரிழப்புகளும், ரயில் விபத்துகள் 16,431 ஆகவும், தண்டவாள விபத்துகள் 1807 ஆகவும் உள்ளன.

2020-ஐ விட 2021-ல் அதிகம்: 2020-ஐ விட 2021-ல் மிக அதிகமாக சாலை விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டில் 57,090 சாலை விபத்துகளும், மத்தியப் பிரதேசத்தில் 49,493 விபத்துகளும், உத்தரப் பிரதேசத்தில் 36,509 விபத்துகளும், மகாராஷ்டிராவில் 30,086 விபத்துகளும், கேரளாவில் 33,501 விபத்துகளும் நடந்துள்ளன.மிசோரம், பஞ்சாப், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேச மாநிலங்களில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு விகிதத்தைப் பொருத்தவரை மொத்த விபத்துகளில் 3,73,884 பேர் காயமடைந்தனர், 1,73,860 பேர் உயிரிழந்தனர். இவர்களில் உத்தரப்பிரதேசத்தில் 24,711 பேர் இறந்தனர். தமிழகத்தில் 16,685 பேர் இறந்தனர். மகாராஷ்டிராவில் 16,446 பேர் இறந்தனர். இந்த மூன்று மாநிலங்கள் மட்டுமே முறையே 14.2%, 9.6% மற்றும் 9.5% சாலை விபத்து உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன. மொத்தமாக இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் 33.3 சதவீத இறப்பு பதிவாகியுள்ளது.

2021ல் மொத்தம் 4,03,116 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இது கடந்த 2020ல் 3,54,796 ஆக இருந்தது. சாலை விபத்து மரணங்கள் 2020ல் 1,33,201 ஆக இருந்தது. 2021ல் இது 1,55,622 ஆக அதிகரித்துள்ளது.

2017 முதல் பெறப்பட்ட புள்ளிவிவரங்களைப் பார்க்கும் போது, 2017 முதல் 2019 வரை சாலை விபத்து மரணங்கள் மிகமிக அதிகமாக இருந்தன. 2020ல் சாலை விபத்துகள் வெகுவாகக் குறைந்தது. பின்னர் 2021ல் அவை மீண்டும் அதிகரித்துள்ளது. இருப்பினும் 2017, 2018, 2019 சாலை விபத்து மரணங்களுடன் 2021ல் குறைவாகவே பதிவாகியுள்ளது. ஆனால் 2020வை விட அதிகமாக உள்ளது. 2020ல் சாலை விபத்து மரணங்கள் 1,46,354 ஆக இருந்தது. 2021ல் இது 1,73,860 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x