Last Updated : 28 Oct, 2016 09:56 AM

 

Published : 28 Oct 2016 09:56 AM
Last Updated : 28 Oct 2016 09:56 AM

டெல்லியில் பொது இடத்தில் மது அருந்தினால் அபராதம் ரூ.200-ல் இருந்து 5,000 ஆக உயர்வு: நவம்பர் 7 முதல் அமலுக்கு வருகிறது

டெல்லியில் பொது இடங்களில் மது அருந்துவோருக்கு விதிக்கப் படும் அபராதம் ரூ.5000 ஆக உயருகிறது. இது வரும் நவம்பர் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிக்கையில், “டெல்லியில் பொது இடங்களில் மது அருந்து வோருக்கு தற்போது ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. இது வரும் 7-ம் தேதி முதல் ரூ.5,000 ஆக உயர்த்தப்படுகிறது. மது போதையில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதத்துடன் 3 மாத சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டம் டெல்லியில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டம் இனி தீவிரமாக அமல்படுத் தப்படும். இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற் படுத்தப்படும். மதுக்கடைகளுக் கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என மாநில அரசின் அமலாக்கத் துறை மூலம் கண்காணிக்கப்படும்” என்று கூறப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு ஒருநாள் முன்னதாக சிசோடியா, கிழக்கு டெல்லி சந்தைப் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது, அரசு விதிமுறைகள் அங்கு மீறப்படுவதுடன் பொது இடங்களில் நின்று பலர் மது அருந்துவதைக் கண்டுள்ளார். இத்துடன், போதையில் பலரும் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதை பார்த்துள்ளார். இதையடுத்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் ஆலோசனை நடத்திய சிசோடியா, இதை தடுக்க புதிய முடிவுகளை எடுத்துள்ளார்.

இதுகுறித்து டெல்லி மாநில உயரதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “மது தொடர்பான அனைத்து குற்றங்களுக்கும் ஏற் கெனவே இருக்கும் 3 மாத சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக உயர்த்தி சட்டத்திருத்தம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இக் குற்றங்களில் பெரும்பாலான வற்றுக்கு ஜாமீன் கிடைக்காத வகையில் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்கள் மற்றும் கோயில்களுக்கு அருகில் தற்போது 75 மீட்டர் வரை மதுக்கடைகள் செயல்பட தடை உள்ளது. இது 100 மீட்டர் ஆக உயர்த்தப்பட உள்ளது. பிஹாரை போல டெல்லியில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இங்கு மது விற்பனை தொடர்பான சட்டம் கடுமையாக்கப்பட உள்ளது. இதில் அனைத்து மதுக் கடைகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சிசிடிவி கேமரா அமைத்து தீவிர கண்காணிப்பும் நடத்தப்பட உள்ளது” என்று தெரிவித்தனர்.

டெல்லியில் அரசு அனுமதி பெற்ற மதுக்கடைகள் சுமார் 500 உள்ளன. இவற்றால் கிடைக்கும் வருமானம் டெல்லி அரசுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. வரும் ஆண்டில் இதன் வருவாய் ரூ.4500 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. நவம்பர் 7 முதல் அமலாக்கப்படும் புதிய விதிகள் காரணமாக இந்த இலக்கை எட்டு வது கடினம். என்றாலும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதன் நிறுவனர்களான பிரஷாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் நடத்தும் போராட்டங்களின் தாக்கமே புதிய விதிமுறைகளுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x