Published : 02 Oct 2016 10:35 am

Updated : 02 Oct 2016 10:35 am

 

Published : 02 Oct 2016 10:35 AM
Last Updated : 02 Oct 2016 10:35 AM

மங்குகிறது கட்டுப்பாட்டு எல்லைக்கோடு

ஆக்ரா உச்சி மாநாட்டுக்காக பாகிஸ்தான் அதிபராக இருந்த ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் இந்தியா வந்திருந்தார்; அந்த நேரம் உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானியிடம் மாநாட்டு இடைவேளையில் நான் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு தகவலைக் கூறினார். “இரு நாடுகளுக்கும் இடையில் நம்பிக்கையை ஏற்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்?” என்று முஷாரஃப் கேட்டாராம். “தேடப்படும் குற்றவாளிகளைக் கைது செய்து வெளியேற்றும் உடன்படிக்கையில் கையெழுத்திடுங்கள், தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புங்கள்” என்று அத்வானி பதிலளித்தாராம். “இதையெல்லாம் எங்களுடைய ராணுவ பாஷையில் ‘மிகச் சிறிய விஷயங்கள்’ என்போம்; மிகப் பெரிதாகக் கருதப்படக்கூடியதைக் கேளுங்கள்” என்றாராம்.

குறுகிய காலத்தில் கிடைக்கக்கூடிய சிறு லாபத்தைவிட நிலைத்திருக்கக்கூடிய நன்மையை நாடியிருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். இந்த அளவுகோலை, எல்லைக்கோட்டுக்கு அப்பாலிருக்கும் தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் எல்லை தாண்டி போய் தாக்கியிருப்பதுடன் பொருத்திப் பாருங்கள். செப்டம்பர் 28-க்கும் 29-க்கும் இடையிலான இரவில் என்ன நடந்தது? பாகிஸ்தான் கேலி செய்வதை ஏற்றுக்கொண்டால் - இந்திய கமாண்டோக்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் கால் வைத்தார்களா அல்லது இங்கிருந்தபடியே சிறு பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் சுட்டு அங்கிருந்த 2 ஜவான்களை மட்டும் கொன்றார்களா? மேம்போக்காகப் பார்த்தால் இவையெல்லாம் சாதாரண விஷயங்கள். ஆனால் இதைவிடப் பெரியது, இந்தத் தாக்குதல் குறித்து இந்தியா பகிரங்கமாக அறிவித்ததுதான்!


காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1989 முதல் பிரச்சினைகள் பெரிதானதிலிருந்தே, மும்பை மாநகரில் 1993-ல் பயங்கரவாதிகளால் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததிலிருந்தே இந்திய அரசு எப்படி நடந்துகொள்ளும் என்ற பதில் நடைமுறைகள் உருவாகத் தொடங்கின. 1972 சிம்லா ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டபடி காஷ்மீர் பிரச்சினையை இருதரப்பு பிரச்சினையாக மட்டுமே பராமரிக்க வேண்டும் என்பதில் இந்தியா தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. போர் நிறுத்தக் கோட்டை, ‘கட்டுப்பாட்டு எல்லைக் கோடாக’ (எல்.ஓ.சி.) ஏற்பது என்ற முடிவும் சிம்லா ஒப்பந்தப்படிதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1984-ல் சியாச்சின் பனி மலை முகட்டில் பாகிஸ்தானியத் துருப்புகள் ஆக்கிரமித்தபோது அவர்களை அகற்ற இந்திய ராணுவம் மேற்கொண்ட முயற்சியும் இந்த அடிப்படையில்தான் நடந்தது. சியாச்சின் என்பது யாருடைய எல்லை என்று ‘என்.ஜே.9842’ என்று வரைபடத்தில் குறிப்பிட்டதன் அடிப்படையில், அது எங்களுடையதுதான் என்று இந்தியா சொந்தம் கொண்டாட முடிந்தது. இதை ஏற்க மறுத்த பாகிஸ்தான் பல முறை அங்கே தாக்குதலைத் தொடுத்தும் இறுதியில் ஈடு கொடுக்க முடியாமல் வெளியேற நேர்ந்தது. கார்கிலில் இந்தியா பதிலடி கொடுக்கவும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு என்று ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைதான் அடிப்படையாக இருந்தது.

எல்லைக்கோட்டுக்கு அப்பால் விஷமிகள் நாசவேலைகளுக்காகக் குழுமினாலோ, இந்திய எல்லையை நோக்கி தாக்க ஏற்பாடுகள் செய்தாலோ இந்திய ராணுவ வீரர்கள் அந்த இடத்தை அடைய, சிறிது நேரத்துக்கு எல்லைக் கோட்டைக் கடந்து செல்வதும் விஷமிகளை அகற்றிய பிறகு தங்களுடைய நிலைக்குத் திரும்புவதும் வழக்கமாக இருந்து வருகிறது. 2013 ஜனவரியில் இந்திய ராணுவ வீரர்கள் இருவரைக் கொன்ற பயங்கரவாதிகள் அவர்களுடைய தலைகளை அறுத்து எடுத்துச் சென்றதற்கு நம்முடைய வீரர்கள் பழிவாங்கிவிட்டனர் என்று அப்போது தரைப்படை தளபதியாக இருந்த ஜெனரல் விக்ரம் சிங் தெரிவித்தார்.

கார்கில் போர் முடிந்து வெகு காலத்துக்குப் பிறகு இந்திய விமானப்படையின் 4 மிராஜ் போர் விமானங்கள், பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்து சென்று லேசர் குண்டுகள் மூலம் ஒரு இலக்கைத் தாக்கி அழித்துவிட்டுத் திரும்பின. அதற்கான ஒத்திகையை சிவாலிக் மலைக் குன்றுப் பகுதியில் அவை நடத்தின. இது நடந்ததற்குப் பிறகு பாகிஸ்தானியரும் எதையும் கூறவில்லை. இதற்குப் பதிலடியை இதே போல ரகசியமாகத் தர வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்திருக்கக் கூடும். ஆனால் இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் இவை எல்லாவற்றையுமே மாற்றிவிட்டது.

சர்வதேச எல்லைக் கோட்டைப் போல, கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டையும் மதிக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் கேட்பதற்குப் பதிலாக, இந்திய ராணுவமே இப்போது அதை கேள்விக்குரியதாக்கிவிட்டது. “நாங்கள் தாக்குதல் நடத்திய இடம் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர்தானே, அது எப்படி எல்லை மீறலாகும்?” என்று மத்திய அரசின் மிக இளைய அமைச்சரான ராஜ்யவர்தன் சிங் ரதோட் கேட்கிறார்.

காஷ்மீர் எல்லை தொடர்பாக பேசித் தீர்வு காண்பதாக இருந்தால் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்ற கருத்தொற்றுமை ஏற்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான் இந்திரா காந்தி காலத்தில் சிம்லா ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது; பிறகு வாஜ்பாய், நவாஸ் ஷெரீஃப், முஷாரஃப் இடையே பேச்சு நடந்தது. அவையெல்லாம் இப்போது வரலாறு. 1989-ல் காஷ்மீரில் நடந்த கலகத்தை, சிம்லா ஒப்பந்தத்தைக் கைவிட பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டது என்றால், இந்தியா இப்போது அதையே செய்திருக்கிறது.

சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தாகி 40 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு பிரிவினையானதிலிருந்தே காஷ்மீர் கணக்குத் தீர்க்கப்படவில்லை என்று பாகிஸ்தான் பேசுமானால், சிம்லா ஒப்பந்தம் நிறைவேறிய பிறகும் பாகிஸ்தான் வழிக்கு வரவில்லையே என்று இந்தியா கூறுவதிலும் பதிலடி தருவதிலும் என்ன தவறு என்று நரேந்திர மோடி நினைக்கிறார்.

உரியில் இந்திய ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்திய தகவல் காலையில் கிடைத்தது. “பாகிஸ்தான் தவறு செய்கிறது, இந்தியா சும்மாவே இருக்கும் என்று நினைத்து இப்படிச் செய்கிறது. நம்முடைய ராணுவ உத்தி மாறிக்கொண்டிருக்கிறது” என்று கருத்து தெரிவித்தேன். அதே சமயம், “இந்தியா தன்னை ராணுவரீதியாகக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும், அதனால் இதுவரை நன்மைகள்தான் ஏற்பட்டுள்ளன” என்றும் கூறினேன். நானே என் கருத்தில் முரண்படுவதாகப் பலர் கூறினர். என்ன நடக்கும் என்று ஊகிப்பதும், என்ன நடந்தால் நல்லது என்று கூறுவதும் வேறுவேறு.

வலதுசாரி அரசு ஒன்று முதல் முறையாகப் பதவிக்கு வந்திருக்கிறது. இதுநாள் வரை கடைப்பிடித்த சுய கட்டுப்பாட்டுக் கொள்கையை தளர்த்திக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கிறதே என்று அச்சப்படவில்லை. இந்தப்புதிய சூழலை இந்திய ஆய்வாளர்களும் பாகிஸ்தானியக் கொள்கை வகுப்பாளர்களும் கருத்தில் கொள்ள வேண்டும்.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

இந்தியன் எக்ஸ்பிரஸ்முன்னாள் முதன்மை ஆசிரியர்இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்ஆக்ரா உச்சி மாநாடுஅத்வானிபர்வேஸ் முஷ்ரஃப்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x