Published : 25 Aug 2022 09:54 AM
Last Updated : 25 Aug 2022 09:54 AM

"நாக்கை துண்டிப்போம்"- திப்பு சுல்தானை விமர்சித்த கர்நாடக அமைச்சருக்கு மிரட்டல்; போலீஸில் புகார்

கர்நாடக அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர், தனது நாக்கை துண்டிப்பதாக சிலர் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சுதந்திர தினத்தின் போது கர்நாடக அரசு வைத்த பேனரில் விடி சவர்கர் படங்கள் இடம்பெற்றிருந்தன. முன்னாள் பிரதமர் நேருவின் படம் நீக்கப்பட்டு, சாவர்க்கரின் படம் இடம் பெற்றதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதேபோல் திப்பு சுல்தான் ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் பாஜக சார்பில் 23‍-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 8 நாட்களுக்கு சாவர்க்கர் ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. மைசூருவில் சாவர்க்கர் ரத யாத்திரையை முன்னாள் முதல்வர் எடியூரப்பா காவிக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சாவர்க்கர் படத்தால் அலங்கரிங்கப்பட்ட வாகனம் சாம்ராஜ்நகர், குடகு, மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்றது.

சாவர்க்கர் ரத யாத்திரைக்கு காங்கிரஸாரும் முஸ்லிம் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், குடகு, ஷிவமோகா ஆகிய மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் ஈஸ்வரப்பா, "சிறுபான்மையினர் ஷிவமோகா மாவட்டத்தில் மதக் கலவரத்தைத் தூண்டிவிடுகின்றனர்" எனப் பேசியிருந்தார்.

இந்தச் சூழலில் தான் அவருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதுவும் அவரது வீட்டிற்கே கடிதம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமைச்சர் ஈஸ்வரப்பா, "நான் முஸ்லிம் சமூகத்தினருக்கு சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம். நான் எல்லா முஸ்லிம்களையும் குண்டர்கள் என்று சொல்லவில்லை. கடந்த காலங்களில் முஸ்லிம் பெருமக்கள் சமூக அமைதிக்கு வித்திட்டுள்ளனர். ஆனால் இப்போது சில இளைஞர்கள் குண்டர்களைப் போல் செயல்படுகின்றனர். அவர்களுக்கு முஸ்லிம் பெரியோர் அறிவுரை கூறி நல்வழிப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஷிவமோகா மாவட்டத்தில் சுதந்திர தினத்தைத் தொடர்ந்தே பல பகுதிகளிலும் இன்னமும் ஊரடங்கு அமலில் உள்ளது. அமீர் அகமது சர்கிள் பகுதியில் அமைக்கப்பட்ட வீர் சவர்கர் போஸ்டரை திப்பு சுல்தான் ஆதரவாளர்கள் கிழித்ததால் அங்கு இன்னும் பதற்றம் நிலவுகிறது.

திப்பு சுல்தானை முஸ்லிம் குண்டர் என்று கே.எஸ்.ஈஸ்வரப்பா விமர்சனம் செய்ததும் தற்போது சர்ச்சைப் பட்டியலில் இணைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x