Published : 03 Oct 2016 02:44 PM
Last Updated : 03 Oct 2016 02:44 PM

நிதிஷ் கட்டாரா கொலை வழக்கு: இருவருக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம்

நிதிஷ் கட்டாரா கொலை வழக்கில் குற்றவாளிகள் விகாஷ் யாதவ், விஷால் யாதவுக்கு தலா 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்றாவது குற்றவாளியான சுக்தேவுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, நிதிஷ் கட்டாரா கொலையை ஆணவக் கொலை என்றும் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் நிதிஷ் கட்டாரி. இவர் அந்த மாநில அரசியல்வாதி டி.பி.யாதவின் மகள் பார்தி யாதவை காதலித்தார். இதற்கு டி.பி.யாதவ் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 2002 பிப்ரவரி 17-ம் தேதி நிதிஷ் கட்டாரியும் பார்தியும் டெல்லி அருகேயுள்ள காஜியாபாதில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அங்கிருந்து நிதிஷ் கட்டாரியை பார்தியின் சகோதரர் விகாஷ் யாதவ், உறவினர் விஷால், சுக்தேவ் பல்வா ஆகியோர் கடத்திச் சென்று கொலை செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் விகாஷ் யாதவ், விஷால், சுக்தேவ் பல்வா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து நிதிஷ் கட்டாரியின் தாயார் நீலம் கட்டாரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் விகாஷ் யாதவ், விஷால் யாதவ் ஆகிய இருவருக்கும் 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதில் 5 ஆண்டுகள் சாட்சிகளை கலைத்தற்காக விதிக்கப்பட்டது. ஆனால் மரண தண்டனை விதிக்க மறுத்து விட்டது.

இதனை எதிர்த்து விகாஷ், விஷால், சுக்தேவ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த 2015 ஆகஸ்ட் 17-ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், மூவரையும் குற்றவாளிகள் என உறுதி செய்ததோடு, இந்நாட்டில் கிரிமினல்களே நியாயம் கோரி கூவுகின்றனர் என்ற காட்டமான கருத்தையும் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x