Published : 07 Aug 2022 08:11 PM
Last Updated : 07 Aug 2022 08:11 PM

SSLV ராக்கெட்டின் முதல் பயணம் | இரண்டு செயற்கைக்கோள்களும் பயன்படுத்த இயலாது - இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டோ: இஸ்ரோவின் புதிய தயாரிப்பான எஸ்எஸ்எல்வி (SSLV) ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இரண்டு செயற்கைக்கோள் இஓஎஸ்-02, ஆசாதிசாட் ஆகியவை பயன்படுத்த இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசுகையில், "எஸ்எஸ்எல்வி மூலம் சிறிய ரக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த ஏதுவாக வர்த்தக ரீதியில் அதை இஸ்ரோ தயாரித்தது. அதுதான் இன்றைக்கு வேகமாக வளர்ந்து வரும் புதிய தலைமுறை தொழில்நுட்பமும் ஆகும். அந்த வகையில் தயாரிக்கப்பட்ட எஸ்எஸ்எல்வி செலுத்து வாகனம் 2 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் இன்று காலை 09.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. சிறப்பாக சீறிப் பாய்ந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூன்று நிலைகளை சிறப்பாகக் கடந்து 2 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.

எனினும் நாங்கள் ஏற்கெனவே நிர்ணயித்திருந்த சுற்றுவட்டப் பாதையில் அந்த இரண்டு செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படவில்லை. போதுமான உயரம் எட்டப்படவில்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து அதனை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அந்த இரண்டு செயற்கைக்கோள்களிலும் உணர்கருவி (சென்சார்) தொழில்நுட்பம் சரியாக இயங்கவில்லை என்பதை முதல் கட்டமாக கண்டறிந்துள்ளோம். இவை தவிர வேறு எந்த விதமான தொழில்நுட்பக் கோளாறும் கண்டறியப்படவில்லை.

எனினும் இது தொடர்பாக ஆராய தனிக்குழு அமைத்து ஏன் இந்த உணர்கருவி தொழில்நுட்பக் கோளாறு (சென்சார்) ஏற்பட்டது என்பது குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதோடு இந்த நிமிடம் முதல் அடுத்தக் கட்டத்திற்கு தயாராக ஏதுவாக புதிய மேம்படுத்தப்பட்ட பரிந்துரைகளை அந்தக் குழு அளிக்கும். அதனடிப்படையில் எஸ்எஸ்எல்வி டி-2 மூலம் புதிய செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும். அதோடு இத்தகைய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

SSLV ராக்கெட்டின் முழு விவரம்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, வழக்கமாக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகளை பயன்படுத்திவருகிறது. ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களையும், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தப்பட்டன.

என்றாலும், தற்போதுள்ள சூழலில் உலகம் முழுவதும் குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவுவது தேவையான ஒன்றாக உள்ளது. இதனை கருத்தில்கொண்டு குறைந்த எடைகொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பொருட்டு, எஸ்எஸ்எல்வி (சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம்) ராக்கெட் தயாரிப்பில் சமீபகாலமாக ஈடுபட்டு வந்தது இஸ்ரோ. அதிகபட்சமாக 500 கிலோ வரை எடைகொண்ட செயற்கைக்கோள் அனுப்பும்படி இது வடிவமைக்கப்பட்டது.

இதன் முதல் முயற்சியாக SSLV-D1 என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்றும், அதில் இஓஎஸ்-02 (EOS-02) மற்றும் ஆசாதிசாட் (AZAADISAT) என்ற இரு செயற்கைக்கோள்கள் ஏவப்படும் என்றும் அறிவித்து அதற்கான கவுண்டனை இன்று அதிகாலை தொடங்கியது இஸ்ரோ. 44 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-02 செயற்கைக்கோள் புவி கண்காணிப்புக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒன்று. அதேபோல், ஆசாதிசாட் செயற்கைக்கோளுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

முதலாவதாக, ஆசாதிசாட் இந்திய கிராமங்களில் உள்ள 75 பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்டவை. இதன் எடை 8 கிலோ மட்டுமே. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு மூலம் மாணவிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த ஆசாதிசாட் செயற்கைக்கோளில் சோலார் பேனல்களை படம்பிடிக்கும் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x