Published : 07 Aug 2022 01:40 PM
Last Updated : 07 Aug 2022 01:40 PM

இஸ்ரோவின் புதிய முயற்சியான SSLV -யின் முதல் பயணம் என்ன ஆனது? - நீடிக்கும் சஸ்பென்ஸ்

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் புதிய தயாரிப்பான எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இரண்டு செயற்கைக்கோள் நிலை குறித்து சஸ்பென்ஸ் நீட்டித்து வருகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, வழக்கமாக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகளை பயன்படுத்திவருகிறது. ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களையும், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தப்பட்டன.

என்றாலும், தற்போதுள்ள சூழலில் உலகம் முழுவதும் குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவுவது தேவையான ஒன்றாக உள்ளது. இதனை கருத்தில்கொண்டு குறைந்த எடைகொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பொருட்டு, எஸ்எஸ்எல்வி (சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம்) ராக்கெட் தயாரிப்பில் சமீபகாலமாக ஈடுபட்டு வந்தது இஸ்ரோ. அதிகபட்சமாக 500 கிலோ வரை எடைகொண்ட செயற்கைக்கோள் அனுப்பும்படி இது வடிவமைக்கப்பட்டது.

இதன் முதல் முயற்சியாக SSLV-D1 என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்றும், அதில் இஓஎஸ்-02 (EOS-02) மற்றும் ஆசாதிசாட் (AZAADISAT) என்ற இரு செயற்கைக்கோள்கள் ஏவப்படும் என்றும் அறிவித்து அதற்கான கவுண்டனை இன்று அதிகாலை தொடங்கியது இஸ்ரோ. 44 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-02 செயற்கைக்கோள் புவி கண்காணிப்புக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒன்று. அதேபோல், ஆசாதிசாட் செயற்கைக்கோளுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

முதலாவதாக, ஆசாதிசாட் இந்திய கிராமங்களில் உள்ள 75 பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்டவை. இதன் எடை 8 கிலோ மட்டுமே. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு மூலம் மாணவிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த ஆசாதிசாட் செயற்கைக்கோளில் சோலார் பேனல்களை படம்பிடிக்கும் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் புதிய முயற்சியான எஸ்எஸ்எல்வி ராக்கெட் தனது முதல் பயணத்தை இன்று காலை 9.18 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து தொடங்கியது. முதல் 12 நிமிடங்களிலேயே, எஸ்எஸ்எல்வி ராக்கெட் முதல் 3 நிலைகளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது என அறிவிக்கப்பட்டது. ஆனால், இஓஎஸ்-02 மற்றும் ஆசாதிசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதா என்பதில் தற்போதுவரை சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.

ஏவுதலில் முதல் மூன்று நிலைகள் முடிந்ததும், ராக்கெட் செயற்கைக்கோள்களை பிரித்து வட்டப் பாதையில் நிலை நிறுத்த தொடங்கும். ஆனால், எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை பொறுத்தவரை மூன்று நிலைகளை கடந்தபின்னும், செயற்கைக்கோள் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதற்கான டேட்டா பகிர்வு கிடைக்கவில்லை. டேட்டா இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று இஸ்ரோ தனது முதல்கட்ட தகவலில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த டேட்டா இழப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் இஸ்ரோ தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் பேசும்போதும், இந்த தகவலை உறுதிப்படுத்தியவர், "ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் எதிர்பார்த்தபடியே செயல்பட்டன. ராக்கெட்டின் அனைத்து என்ஜின்களும் சிறப்பாக செயல்பட்டதால் அதன் முன்னேற்றம் சீராக இருந்தது. எனினும் இறுதிக்கட்டத்தில் சில டேட்டா இழப்பு ஏற்பட்டுள்ளது. செயற்கைக்கோள்களின் நிலையை அறிய தரவுகள் சேமிக்கப்பட்டுவருகின்றன" என்று விளக்கமளித்தார். அதேநேரம், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனர் ஸ்ரீமதி கேசன் பேசுகையில், "செயற்கைக்கோள் பற்றி இன்று இரவே தெரிந்துகொள்ள முடியும்" என்று பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்தியாவின் புதிய முயற்சியான எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் முதல் பயணம் வெற்றிகரமாக அமைந்ததா இல்லையா என்ற சஸ்பென்ஸை தெரிந்துகொள்ள இன்னும் சில மணிநேரங்கள் காத்திருக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x