Published : 07 Aug 2022 04:17 AM
Last Updated : 07 Aug 2022 04:17 AM
புதுடெல்லி: இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கரும், எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வாவும் போட்டி யிட்டனர். இந்த தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் 780 பேர் வாக்களிக்கத் தகுதியுடைவர்கள்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 39 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் இருந்து விலகியிருப்பதாக அறிவித்திருந்தனர். அதன்படி, அவர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவில்லை.
பாஜக எம்.பி.க்கள் 394 பேர் உட்பட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மொத்தம் 441 எம்.பி.க்கள் உள்ளனர். வெற்றிக்கு 50 சதவீத வாக்குகள் தேவை என்பதால், இவர்களின் வாக்குகளே, ஜெகதீப் தன்கரின் வெற்றிக்குப் போதுமானவை. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம், அகாலி தளம் மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியும் ஜெகதீப் தன்கருக்கு ஆதரவு தெரிவித்தன. இந்தக் கட்சிகளில் 81 எம்.பி.க்கள் உள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஜார்கண்ட் முக்தி மோர்சா, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஆம் ஆத்மி கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான 9 சிவசேனா எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களித்தனர்.
பின்னர், வாக்குப் பெட்டிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. நேற்று மாலை 6 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
இந்த தேர்தலில் மொத்தமுள்ள 780 எம்.பி.க்களில் 725 பேர் வாக்களித்தனர். 55 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை. வாக்குப்பதிவு சுமார் 93 சதவீதம். பதிவான 725 வாக்குகளில் செல்லுபடியான வாக்குகள் 710. செல்லாத வாக்குகள் 15.
இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் 74.36 சதவீத வாக்குகளைப் பெற்றார். எதிர்க்கட்சி கள் சார்பில் போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் பெற்றார். 346 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகதீப் தன்கர் அபார வெற்றி பெற்றுள்ளார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீப் தன்கர்(71), சைனிக் பள்ளியில் பயின்றவர். ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. மற்றும் எல்எல்பி பட்டத்தை முடித்தார். 1979-ல் ராஜஸ்தானில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர், 1990-ல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றினார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், பின்னர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
ஜனதா தளம் கட்சியில் உறுப்பினராக இருந்த ஜெகதீப் தன்கர், 1989 முதல் 1991-ம் ஆண்டு வரை ராஜஸ்தான் ஜுன்ஜுனு மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்தார். பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில், நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1993 முதல் 1998 வரை ராஜஸ்தான் கிசான்கர் தொகுதி எம்எல்ஏ-வாகவும் இருந்தார். 2008-ல் பாஜகவில் இணைந்தார். கடந்த 2019-ல் இவர் மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், மேற்குவங்க ஆளுநர் பதவியை கடந்த ஜூலை 13-ம் தேதி ராஜினாமா செய்தார். தற்போது குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 11-ம் தேதி புதிய குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்கிறார்.
பிரதமர், தலைவர்கள் வாழ்த்து
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் முடிவுகள் நேற்று இரவு வெளியானதும், டெல்லியில் உள்ள ஜெகதீப் தன்கர் வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, காங்கிஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் ஆளுநர்கள், முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT