Published : 05 Aug 2022 09:37 AM
Last Updated : 05 Aug 2022 09:37 AM

வங்கக்கடலில் ஆக.7ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் வடமேற்குப் பகுதியில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அடுத்த 2 தினங்களில் மழை படிப்படியாகக் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் நிலை அடைந்து வருகிறது. பல மாவட்டங்களில் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதுவரை கேரளாவில் கனமழைக்கு 18 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சாலைகள் பல அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 8ஆம் தேதிக்குப் பின்னர் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மழை படிப்படியாகக் குறையும் என்ற அறிவிப்பு ஆறுதல் செய்தியாக அமைந்துள்ளது.

நீலகிரி, வால்பாறை, கொல்லிமலையில் விடுமுறை: கனமழை தொடர்வதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆக.5) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். நேற்றும் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அறிவித்துள்ளார். கோவை மாவட்டம் வால்பாறையிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய மழை நிலவரம்: இன்று (ஆகஸ்ட் 5) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x