Last Updated : 04 Aug, 2022 09:29 PM

 

Published : 04 Aug 2022 09:29 PM
Last Updated : 04 Aug 2022 09:29 PM

மேகேதாட்டு அணையின் டிபிஆர் நிலை என்ன? - மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: கர்நாடாகா கட்ட முயலும் மேகேதாட்டு அணையின் டிபிஆர் நிலை என்ன என்பது குறித்து மக்களவையில் வியாழக்கிழமை மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மக்களவையில் விழுப்புரம் எம்.பி டி.ரவிகுமார் எழுப்பிய கேள்வியில், ‘மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவை அனுமதிப்பதற்கு மத்திய அரசு முடிவு எடுத்திருக்கிறதா? காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் சமீபத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?’ எனக் கேட்டிருந்தார்.

இந்த வினாக்களுக்கு மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு அளித்த பதில் பின்வருமாறு: மேகேதாட்டு நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர்த் திட்டம், கர்நாடகாவின் சாத்தியக்கூறு அறிக்கை (எப்ஆர்), விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிப்பதற்கான "கொள்கை அளவிலான" அனுமதி பெறுவதற்காக மத்திய நீர் ஆணையத்திடம் (சிடபிள்யுசி) சமர்ப்பிக்கப்பட்டது.

சிடபிள்யுசி திட்ட ஆணையத்தால், கர்நாடகா அரசு டிபிஆர் தயாரிப்பதற்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 'கொள்கை அளவிலான' அனுமதியை வழங்கியது0: “உச்ச நீதிமன்றத்தால் மாற்றியமைக்கப்பட்ட காவிரி நதிநீர்ப் பிரச்சினை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதால், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை (சிடபிள்யுஎம்) ஏற்றுக்கொள்வது இதற்கு ஒரு முன்நிபந்தனையாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு, மேகேதாட்டு நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் டிபிஆர், கர்நாடக அரசால் ஜனவரி 2019 -ல் சிடபிள்யுசிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. திட்ட அறிக்கை நகல்கள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கும் அனுப்பப்பட்டன.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பல்வேறு கூட்டங்களின் போது மேகேதாட்டு நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் திட்ட அறிக்கை மீது விவாதிப்பதற்கு அது நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டது. இருப்பினும், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், இந்த நிகழ்ச்சி நிரல் மீதான விவாதம் நடைபெறவில்லை.

பின்னர், கடந்த பிப்ரவரி 11 அன்று நடைபெற்ற சிடபிள்யுஎம்ஏவின் 15-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைக் கருத்தில் கொண்டு, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட ஆலோசனை பெறப்பட்டு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் 22 அன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை நீர் ஆணையத்தின் 16 -வது கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேகேதாட்டு நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர்த் திட்டம் பற்றிய விவாதம் மீண்டும் சேர்க்கப்பட்டது. ஆனால், மேகேதாட்டு அணை குறித்த திட்ட அறிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x