Published : 31 Jul 2022 01:55 PM
Last Updated : 31 Jul 2022 01:55 PM

’சமூக ஊடக புரொஃபைல் புகைப்படமாக தேசியக் கொடி’ - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடி

சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை, நாட்டு மக்கள் அனைவரும் உங்களுடைய சமூக ஊடக சுயவிவரப் புகைப்படங்களில் (profile pictures), மூவண்ணத்தைப் பதிவிடலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி யோசனை கூறியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில் இன்று (ஜூலை 31) மனதின் குரல், 91ஆவது பகுதி ஒலிபரப்பானது.

அதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்த முறை மனதின் குரல் மிகவும் சிறப்பானது. காரணம் என்னவென்றால், இந்த முறை சுதந்திரத் திருநாள், தான் சுதந்திரம் அடைந்த 75ஆம் ஆண்டினை பாரதம் நிறைவு செய்யவிருக்கிறது. நாம் அற்புதமான-சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டத்தின் சான்றுகளாக ஆக இருக்கிறோம்.

ஜூலை மாதம் 31ஆம் நாள், அதாவது இன்றைய தினத்தன்று தான், நாட்டுமக்களான நாமனைவரும் தியாகி உத்தம் சிங் உயிர்த்தியாகத்திற்குத் சிரம் தாழ்த்துகிறோம். தேசத்தின் பொருட்டு தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணித்த அனைத்து மாபெரும் புரட்சியாளர்களுக்கும் நான் என்னுடைய பணிவான அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா என்பது ஒரு மக்கள் பேரியக்கமாக வடிவடுத்திருப்பதைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அனைத்துத் துறைகள், சமூகத்தின் அனைத்து மட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதோடு தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

இது போன்றதொரு நிகழ்ச்சி, இந்த மாதம் மேகாலயாவில் தொடங்கப்பட்டது. மேகாலயாவின் வீரம்நிறைந்த போராளி, யூ. டிரோத் சிங் அவர்கள் காலமான நாளன்று, மக்கள் அவரை நினைவு கூர்ந்தார்கள். காசி மலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, அங்கே வாழ்ந்த மக்களின் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியை டிரோத் சிங் வலுவாக எதிர்த்தார். இந்த நிகழ்ச்சியில் பல கலைஞர்கள் அழகான படைப்புக்களை அளித்தார்கள். வரலாற்றிற்கு உயிர் கொடுத்தார்கள்.

சில வாரங்கள் முன்னதாக, கர்நாடகத்தில், அம்ருதா பாரதீ கன்னடார்த்தீ என்ற பெயர் கொண்ட வித்தியாசமான இயக்கம் செயல்படுத்தப்பட்டது. இதிலே மாநிலத்தின் 75 இடங்களில் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவோடு இணைந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவற்றில் கர்நாடகத்தின் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவில் கொள்ளுவதோடு, வட்டார இலக்கிய சாதனைகளையும் முன்னிறுத்தும் முயல்வு மேற்கொள்ளப்பட்டது.

இதே ஜூலை மாதத்தில் ஒரு மிகவும் சுவாரசியமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது, இதன் பெயர் – சுதந்திரத்தின் ரயிலும் ரயில் நிலையமும். இந்த முயற்சியின் நோக்கம் என்னவென்றால், மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் இந்திய ரயில்வே துறையின் பங்களிப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே.

தேசத்தில் பல ரயில் நிலையங்களோடு சுதந்திரப் போராட்ட வரலாறு பின்னிப் பிணைந்திருக்கிறது. நீங்களும் கூட, இந்த ரயில் நிலையங்கள் பற்றித் தெரிந்து கொண்டு ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

ஜார்க்கண்டின் கோமோ ரயில் சந்திப்பு, இப்போது அதிகாரப்பூர்வமாக, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரயில் சந்திப்பு கோமோ என்ற பெயரால் அறியப்படுகிறது. ஏன் தெரியுமா? அதாவது இந்த ரயில் நிலையத்தில் தான், கால்கா மெயிலில் பயணித்து நேதாஜி சுபாஷ், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தந்திரமாகப் போக்குக் காட்டுவதில் வெற்றி பெற்றார்.

நீங்கள் அனைவரும் லக்னோவுக்கு அருகிலே காகோடீ ரயில் நிலையத்தின் பெயரைக் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த நிலையத்தோடு ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபாகுல்லா கான் போன்ற தீரர்களின் பெயர் இணைந்திருக்கிறது. இங்கே ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் கஜானாவைக் கொள்ளையடித்த வீரமான புரட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுக்குத் தங்களுடைய பலம் என்ன என்பதைக் காட்டினார்கள்.

நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களோடு பேச நேர்ந்தால், நீங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் வாஞ்சி மணியாச்சி ரயில் சந்திப்புப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். தமிழரான, சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் பெயரை இந்த நிலையம் தாங்கி இருக்கிறது. இந்த இடத்தில் தான் 25 வயதே நிரம்பிய இளைஞனான வாஞ்சி, பிரிட்டிஷ் ஆட்சியர் செய்த தவறுக்குத் தண்டனை வழங்கினார்.

நாடெங்கிலும் 24 மாநிலங்களில் பரந்து விருந்திருக்கும் 75 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இந்த 75 நிலையங்கள் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பலவகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. நீங்களும் கூட, கொஞ்சம் நேரம் ஒதுக்கி, உங்கள் அருகிலே இருக்கும் ஏதாவது ரயில் நிலையத்திற்குச் சென்று வாருங்கள்.

சுதந்திரப் போராட்டம் பற்றி, உங்களுக்கும் தெரியாத தகவல்கள் உடைய, இப்படிப்பட்ட சரித்திரம் பற்றி விரிவாகத் தெரியவரும். அக்கம்பக்கத்தில் இருக்கும் பள்ளி மாணவர்களிடத்திலே நான் கேட்டுக் கொள்வதெல்லாம், ஆசிரியர்களிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், நீங்கள் உங்கள் பள்ளியைச் சேர்ந்த சின்னச்சின்ன பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, ரயில் நிலையம் செல்லுங்கள், மொத்த சம்பவத்தையும் அந்தப் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள், புரிய வையுங்கள்.

என் மனம்நிறை நாட்டுமக்களே, சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவின்படி, ஆகஸ்ட் மாதம் 13 முதல் 15 வரை, இல்லந்தோறும் மூவண்ணக்கொடி என்ற ஒரு சிறப்பு இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டு, ஆகஸ்ட் மாதம் 13 முதல் 15 வரை, நீங்களும் உங்கள் இல்லங்களில் மூவண்ணக் கொடியைப் பறக்க விடுங்கள், அல்லது அதை உங்கள் வீட்டில் ஏற்றுங்கள்.

மூவண்ணக் கொடி நம்மை இணைக்கிறது, நாம் தேசத்தின் பொருட்டு பங்களிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது. உங்களிடத்திலே எனக்கு மேலும் ஒரு கோரிக்கையும் உண்டு; அதாவது ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை, நீங்கள் அனைவரும் உங்களுடைய சமூக ஊடக சுயவிவரப் புகைப்படங்களில், மூவண்ணத்தைப் பதிவிடலாம்.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதிக்கு, நமது மூவண்ணக் கொடியோடு ஒரு தொடர்பு இருக்கிறது. இந்த நாளன்று தான் பிங்கலீ வெங்கையா அவர்கள் பிறந்தார், இவர் தான் நமது தேசியக் கொடியை வடிவமைத்தார். நான் அவருக்கு என்னுடைய மரியாதை கலந்த நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன்.

நமது தேசியக் கொடி பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், மகத்தான புரட்சியாளர் மேடம் காமாவையும் கூட நாம் நினைவுகூருவோம். மூவண்ணக் கொடிக்கு வடிவம் கொடுப்பதில் அவருடைய பங்களிப்பு மிகவும் மகத்துவம் வாய்ந்தது.

நண்பர்களே, சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவில் நடந்தேறி வரும் இந்த ஏற்பாடுகள் அனைத்தும் அளிக்கும் மிகப்பெரிய செய்தி என்னவென்றால், நாட்டுமக்களாகிய நாமனைவரும் நமது கடமைகளை முழுமுனைப்போடு செயல்படுத்த வேண்டும் என்பது தான். அப்போது தான் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நம்மால் நிறைவேற்ற இயலும். அவர்கள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்க முடியும். ஆகையால் நமது அடுத்த 25 ஆண்டுகளின் இந்த அமிர்தகாலம், ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமைக்காலம் போன்றதாகும். தேசத்திற்கு விடுதலை பெற்றுத்தந்த, நமது வீரர்கள், நமக்கெல்லாம் ஒரு பொறுப்பை விட்டுச் சென்றிருக்கிறார்கள். நாம் அதனை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x