Published : 31 Jul 2022 04:45 AM
Last Updated : 31 Jul 2022 04:45 AM

நாட்டில் மதத்தின் பெயரால் சிலர் பிரிவினையை தூண்டுகின்றனர் - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டில் மதத்தின் பெயரால் சிலர் பிரிவினையைத் தூண்டுகின்றனர் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் நேற்று சர்வமத தலைவர்களின் மாநாடு நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் உட்பட பல்வேறு மதங்களை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது:

நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்க சிலர் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். அவர்கள் மதத்தின் பெயரால் பிரிவினையை தூண்டிவருகின்றனர். மதத்தின் பெயரால் வெறுப்புணர்வை தூண்டும் நபர்கள், அமைப்புகள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள்.

நாட்டின் அனைத்து சமூகத்தினரும் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் அனைத்து மதங்களுக்கும் முழு சுதந்திரம் உள்ளது. பிரிவினைவாத அமைப்புகளுக்கு எதிராக மக்கள் துணிச்சலாக குரல் கொடுக்க வேண்டும். நாட்டில் அமைதியை நிலைநாட்ட அனைத்து மதத் தலைவர்களும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நாட்டில் அமைதி நிலவினால்தான் இந்தியா வலுவான நாடாக உருவெடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான முஸ்லிம் தலைவர்கள், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மாநாட்டின் இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ‘‘பிரிவினைவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். எந்தவொரு மதத்தின் கடவுளையும் அவமரியாதை செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். விவாதத்தில் கடவுள்கள் குறித்து விமர்சிக்கக்கூடாது. சமூக வலைதளங்களில் மதரீதியான வெறுப்புணர்வு பரப்பப்படுவதை தடுக்கவேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x