Published : 30 Sep 2016 08:51 PM
Last Updated : 30 Sep 2016 08:51 PM

பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டால் மட்டும் முடியாது ‘தூய்மை இந்தியா’ திட்டம்: பிரதமர் மோடி

‘‘தூய்மை இந்தியா திட்டம் வெற்றிபெற பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியால் மட்டும் முடியாது. காலனி ஆதிக்கத்துக்கு எதிராக மகாத்மா காந்தி நடத்திய சத்தியாகிரகம் போல், தூய்மை இந்தியா திட்டம் பேரியக்கமாக மாற வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின், தூய்மை இந்தியா (ஸ்வாச் பாரத்) திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் தொடங்கி 2 ஆண்டுகள் முடிவடைந்ததை முன்னிட்டு, டெல்லியில் ‘இந்திய சுகாதாரம்’ என்ற தலைப்பில் மாநாடு நடந்தது. இதில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:

பிரதமர் பதவியேற்றதும் நான் தொடங்கிய ‘தூய்மை இந்தியா’ திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். அதற்காக சாலைகள் மற்றும் வேறு பல இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கும் புகைப்படங்களை ஆதாரமாக காட்டி உள்ளனர். ஆனால், தூய்மை இந்தியா திட்டம் தொடங்கிய பிறகு நாடு முழுவதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

இந்தத் திட்டம் வெற்றி பெற பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியால் மட்டும் முடியாது. காலனி ஆதிக்கத்தை எதிர்த்து மகாத்மா காந்தி சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினார். அது நாடு முழுவதும் பேரியக்கமாக மாறியது. அதேபோல் தூய்மை இந்தியா திட்டமும் பேரியக்கமாக மாற வேண்டும். அதாவது, ‘ஸ்வாச் பாரத்’ திட்டம், ‘ஸ்வாச்கிரக’ இயக்கமாக வேண்டும்.

சாலைகள் உட்பட சுற்றுப்புறங்களில் குப்பைகள் இருப்பதாக கூறுபவர்கள், அவற்றை தூய்மைப்படுத்த முன்வருவதில்லை. அந்த பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வதில்லை. இது முரண்பாடாக உள்ளது. தூய்மைப்படுத்தும் பணி அரசியல்வாதிகளுக்கு அவ்வளவு எளிதானது அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாட்டில் எங்காவது தேர்தல் வருகிறது. அரசியல்வாதிகளும் அரசியல் கட்சியினரும் தேர்தலில் கவனம் செலுத்துகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், குப்பைகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் வேலைவாய்ப்புகளையும் வருமானத்தையும் பெருக்க வேண்டும். கோயில்கள், சர்ச்கள், மசூதிகள் உள்ள பகுதிகளில் சேரும் குப்பைகளை உரமாக்க முயற்சி எடுக்க வேண்டும். குப்பைகளை வருமானமாக மாற்ற இந்திய சமூக கற்றுக் கொண்டால், தூய்மை என்பது துணை உற்பத்தி பொருளாக மாறிவிடும்.

தற்போது குழந்தைகளிடம் தூய்மை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதன் பொருள் ‘ஸ்வாச் அபியான்’ மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்பதுதான். மேலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதில் நகரங்கள், சிறிய நகரங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x