Published : 14 Jul 2022 03:30 PM
Last Updated : 14 Jul 2022 03:30 PM

இனி பாஜக அரசை எதைச் சொல்லித்தான் நாங்கள் விமர்சிப்பது: மஹூவா மொய்த்ரா 

நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ள வார்த்தைகள் அடங்கிய பட்டியலுக்கு திரிணமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மக்களவை செயலர் அவை நாகரிகமற்ற வார்த்தைகள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதிலுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாகவும், மீறி பயன்படுத்தினால் அவைக் குறிப்பிலிருந்து அந்த வார்த்தைகள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தடை செய்யப்பட்ட வார்த்தைகளின் பட்டியல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ஆங்கில அகர வரிசையில் அவை பட்டியலிடப்பட்டுள்ளன. 40 வார்த்தைகளும் சில சொற்றொடர்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

இதற்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மூன்று ட்வீட்களில் அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார் மென்மையாக உறுப்பினர்களை கடிந்து கொள்வார். மெல்லிய குரலில் அமருங்கள், அமருங்கள். அன்புடன் பேசுங்கள் என்று கூறுவார். 2013ல் மக்களவையின் உச்சபட்ச கூச்சல் குழப்பங்களைக் கூட அவர் இவ்வாறு தான் கையாண்டார். அதனை சுட்டிக்காட்டியுள்ளார் மஹூவா மொய்த்ரா.

அவருடைய ட்வீட்டில், எல்லோரும் அமைதியாக அமருங்கள். அன்புடன் பேசுங்கள். மக்களவை, மாநிலங்களவையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அடிப்படையில் மத்திய பாஜக அரசை எதிர்க்கட்சிகள் எப்படி விமர்சிக்குமோ அதற்குரிய வார்த்தைகள் எல்லாவற்றையும் தடை செய்துள்ளனர். இந்தியாவை பாஜக சிதைக்கும் விதத்தை இனி எப்படித்தான் வர்ணிப்பது என்று வினவியுள்ளார்.

அடுத்த ட்வீட்டில் ’உண்மை’ அவை நாகரிகமற்ற வார்த்தையா?
-வருடாந்திர பாலின பாகுபாடு அறிக்கை 2022 வெளியாகியுள்ளது. இதில் இந்தியா 135வது இடத்தில் உள்ளது.
-சுகாதாரக் குறியீட்டில் இந்தியா 146வது இடத்தில் அதாவது கடைசி இடத்தில் உள்ளது.
-உலகளவில் பாலின பாகுபாடு 5% க்கும் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் இனி நான் தடை செய்யப்பட்ட வார்த்தைகளுக்கு வேறு வார்த்தைகளை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு பதிலாக கோகோய் என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமா என்று கேட்டுள்ளார்.
அதேபோல் நல்ல வேளையாக சங்கி என்ற வார்த்தை தடை செய்யப்படவில்லை என்றும் மொய்த்ரா கூறியிருக்கிறார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ ப்ரெய்ன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றம் கூடுகிறது. இனி நாங்கள் வெட்கப்படுகிறோம், வஞ்சிக்கப்பட்டோம், ஊழல், தகுதியற்ற போன்ற சாதாரண வர்த்தைகளைக் கூட பயன்படுத்த முடியாது. ஆனால் நான் இவற்றைப் பயன்படுத்துவேன், என்னை அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யுங்கள், இது நான் ஜனநாயகத்திற்காக மேற்கொள்ளும் போராட்டம்" என்று கூறியுள்ளார்.

இன்னும் பல எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x