Published : 28 May 2016 10:43 AM
Last Updated : 28 May 2016 10:43 AM

கர்நாடக மாநில பாஜக.வில் நிர்வாகிகள் 40 பேர் மாற்றம்

கர்நாடகத்தில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளார். முதல்கட்டமாக 40 முக்கிய நிர்வாகிகளை அவர் அதிரடியாக மாற்றியுள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஊழல் வழக்கில் சிக்கியதால் கடந்த 2011-ல் பாஜகவில் இருந்து ஓரங்கட்ட‌ப்பட்டார். தனிக்கட்சி ஆரம்பித்த அவர், எதிர்ப்பார்த்த வெற்றியை பெற முடியாததால் மீண்டும் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அவர் மாநில‌ பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

அப்போது எடியூரப்பா, “கர்நாடகாவில் வரும் 2018-ல் நடைபெறும் தேர்தலில் ஆளும் காங்கிரஸை வீழ்த்தி, மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்துவோம்” என சூளுரைத்தார். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் எடியூரப்பா சில நாட்களுக்கு முன் கூறும்போது, “கர்நாடகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் நடக்கப் போகிறது. அதில் பாஜக வெற்றி பெற வேண்டுமானால் கட்சியில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும். செயல்படாதவர்கள் மூத்த தலைவர்களாக இருந்தாலும் பதவியை விட்டு நீக்கப்படுவார்கள்” என்று எச்சரித்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று, பாஜகவின் மாநில துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள், மகளிர், வழக்கறிஞர், விவசாயிகள் உட்பட பல்வேறு அணிகளின் தலைவர்கள் உட்பட 40 பேரை அதிரடியாக மாற்றியுள்ளார். இதில் 4 முக்கிய பதவிகளில் தனது சமூகமான லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர்க‌ளை நியமித்துள்ளார்.

துணைத் தலைவர்களாக முன்னாள் அமைச்சர்கள் கோவிந்த கார்ஜோள், ராமுலு, பாபுராவ் சவுகான் உள்ளிட்டோரும் பொதுச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் ஷோபா கரந்தலாஜே, அரவிந்த் லிம்பாவளி உள்ளிட்டோரை நியமித்துள்ளார். ஒரே நேரத்தில் பாஜகவில் முக்கிய தலைவர்களாக புதியவர்கள் நியமிக்கப்பட்டு இருப்பது, கர்நாடக அரசியலில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x