Published : 21 Jun 2022 12:38 PM
Last Updated : 21 Jun 2022 12:38 PM

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா?

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக மூன்று தலைவர்கள் மறுத்துள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில், 17 எதிர்க்கட்சிகள் டெல்லியில் கடந்த 15-ம் தேதி ஆலோசனை நடத்தின.

அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவர் தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டார். இதையடுத்து, தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என பரூக் அப்துல்லா கூறி விட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்த வாய்ப்பாக மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. அவரும் மறுத்து விட்டார்.

இந்தநிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை முடிவு செய்ய எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.

இதில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்காவை குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. யஷ்வந்த் சின்கா தற்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தற்போது துணைத் தலைவராக இருந்து வருகிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஏதுவாக தனது ராஜினாமா கடிதத்தை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு அவர் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இதுகுறித்து யஷ்வந்த் சின்கா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜி எனக்கு அளித்த மரியாதைக்கும் அன்புக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இப்போது ஒரு பெரிய தேசிய நோக்கத்திற்காக நான் கட்சியில் இருந்து ஒதுங்கி, அதேசமயம் அதிகமாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த முடிவை மம்தா பானர்ஜி ஏற்பார் என நான் நம்புகிறேன்.’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x